கொவிட்-19: விழிப்புடன் இருக்கும்படி மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

2 mins read
5d2d4af6-dfa0-4afc-a8fd-23bc6a365501
பள்ளி விடுமுறை நெருங்குகையில் கிருமிப் பரவல் அபாயம் அதிகம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - படம்: தி ஸ்டார்

ஜார்ஜ்டவுன்: கொவிட்-19 கிருமித்தொற்று குறித்து மலேசியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, பள்ளி விடுமுறை நெருங்குகையில் கிருமிப் பரவல் அபாயம் அதிகம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலர் ஒன்றுகூடும் இடங்களில் கொவிட்-19 கிருமி பரவல் அதிகரிக்கக்கூடும் என்று கிருமியியல் நிபுணர் குமிதா தேவதாஸ் கூறினார்.

“தாய்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சொங்க்ரான் விழாவில் பலர் கலந்துகொண்டனர். அதையடுத்து, கொவிட்-19 கிருமித்தொற்று அதிகரித்தது. ஆனால் இந்த ஜே.என். 1 கிருமிவகை சிறிது காலமாகவே பரவி வருகிறது. எனவே, பள்ளி விடுமுறையின்போது கிருமித்தொற்று திடீரென்று பேரளவில் ஏற்றம் காணாது,” என்றார் டாக்டர் குமிதா.

மலேசியாவில் மே 29ஆம் தேதியிலிருந்து ஜூன் 9ஆம் தேதி வரை பள்ளி விடுமுறை.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் குமிதா, நிலைமை சமாளிக்க முடியாத அளவுக்குச் செல்லாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கப்பூர் உட்பட மலேசியாவின் அண்டைநாடுகளில் ஜே.என்.1 கிருமிவகையுடன் தொடர்புடைய கிருமிகளால் நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.

எல்.எஃப்.7 கிருமிவகை 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மலேசியாவில் தலைதூக்கியதாக டாக்டர் குமிதா கூறினார்.

“பலர் இதற்கு முன்பு பாதிப்படைந்து நோய்வாய்ப்பட்டுள்ளனர். எனவே, இந்தக் கிருமிவகைகளுக்கு எதிராக அவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி உள்ளது. இருப்பினும், சிறுவர்கள் மற்றும் முதியோர் முகக்கவசம் அணிந்துகொள்வது நல்லது,” என்றார் அவர்.

மலேசியர்கள் மெத்தனத்தமாக இருந்துவிடக்கூடாது என்று பினாங்கு மருத்துவமனையின் தொற்றுநோய் பிரிவுத் தலைவர் சாவ் டிங் சூ தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்டிருக்கும்போது பொது இடங்களைத் தவிர்ப்பது நல்லது என்றார் அவர்.

கொவிட்-19 தடுப்பூசிகளை அரசாங்க சுகாதார மருந்தகங்களில் போட்டுக்கொள்ளலாம் என்று டாக்டர் சாவ் தெரிவித்தார்.

மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அபாயகட்டத்தை எட்டவில்லை என்று பினாங்கு சுகாதாரத்துறை இயக்குநர் ஃபஸிலா ஷேக் அலாவுதீன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்