கோலாலம்பூர்: ஹஜ்ஜு யாத்திரை மேற்கொள்ளும் சில மலேசியர்கள் கொவிட்-19, சளிக்காய்ச்சல் ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளைக் கட்டாயமாகப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொவிட்-19, சளிக்காய்ச்சல் கிருமித்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் இருப்போர் அவற்றுக்கான தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டுக்கொள்ளவேண்டும். 65 வயது அல்லது அதையும் தாண்டிய யாத்திரிகர்கள், நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பவர்கள் என சுகாதாரப் பரிசோதனையின் மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்டோரில் அடங்குவர் என்று மலேசிய சுகாதார அமைச்சு சனிக்கிழமையன்று (பிப்ரவரி 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதோடு, ஹஜ்ஜுப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் எல்லா மலேசியர்களும் மெனிஞ்சோக்கொக்கல் (meningococcal) தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாகும்.
தகுதிபெறுவோர், மலேசியா முழுவதும் உள்ள குறிப்பிட்ட 247 மருந்தகங்களில் கொவிட்-19 தடுப்பூசியை இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) முதல் மைசெஜாத்ரா (MySejahtera) செயலியில் அதற்கான முன்பதிவுகள் தொடங்கின. மலேசிய சுகாதார அமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.
திங்கட்கிழமை (பிப்ரவரி 17) முதல் தடுப்பூசி போடப்படும் என்று மலேசியாவின் பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
“முன்பதிவு செய்தோருக்கு அதைப் பற்றி நினைவூட்டும் குறுந்தகவல், அந்தத் தேதிக்கு (பிப்ரவரி 17) முன்பு மைசெஜாத்ரா செயலிவழி அனுப்பப்படும்,” என்று சுகாதார அமைச்சு சனிக்கிழமையன்று குறிப்பிட்டது.

