லங்காவி: மலேசியாவின் லங்காவி பகுதியில் மார்ச் 21ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் கார் மோதியதால் தூக்கிவீசப்பட்ட பசு அந்த காரின் பின்பக்கம் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கார் ஓட்டுநருக்குக் காயம் ஏதுமில்லை என்று மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
அந்த 26 வயது ஆடவர் ஜாலான் உலு மலாக்கா வழியாக ஜாலான் ஆயர் ஹங்காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக லங்காவி மாவட்டக் காவல்துறை கூறியது.
மூன்று வழி சாலைச் சந்திப்பு ஒன்றை அவர் நெருங்கியபோது எதிர்பாரா விதமாகப் பசு மந்தை ஒன்று குறுக்கிட்டதாகவும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தமுடியாமல் அவற்றின்மீது மோதியதாகவும் கூறப்பட்டது.
மந்தையில் ஒரு பசு காரின் மேல்பக்கம் தூக்கிவீசப்பட்டது என்றும் பின்னர் அது பின்பக்கம் விழுந்தபோது காரின் பின்பக்கக் கண்ணாடி நொறுங்கியது என்றும் காவல்துறை அறிக்கை குறிப்பிட்டது.
சம்பவத்தை அடுத்து காரின் முன்பக்கம் கணிசமாகச் சேதமடைந்ததுடன் அதன் மேல்பக்கமும் நசுங்கியது என்று தெரிவிக்கப்பட்டது.
மலேசியப் போக்குவரத்துக் காவல்துறை இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்கிறது.