மலேசியா முழுவதும் ரோன்95 கடத்தல் முறியடிப்பு தீவிரம்

மலேசியா முழுவதும் ரோன்95 கடத்தல் முறியடிப்பு தீவிரம்

2 mins read
பினாங்கில் 415,877 ரிங்கிட் மதிப்பிலான சலுகை விலை எரிபொருள் பறிமுதல்
80502f08-07aa-4d91-93b0-6e63986d59dd
ஜோகூர் பாருவில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்று. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: சலுகை விலையில் வழங்கப்படும் ரோன்95 பெட்ரோல் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவது, கடத்தப்படுவது போன்ற செயல்களை முறியடிக்கும் நடவடிக்கைகளை ஜோகூர் மாநில உள்ளூர் வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளது.

முறியடிப்பு நடவடிக்கைகளில் ‘அண்டர்கவர் ஆப்பரே‌ஷன்ஸ்’ எனப்படும் ரகசிய நடவடிக்கைகளும் அடங்கும். குறிப்பாக ஜோகூர் மாநில எல்லையில் இருக்கும் 31 பெட்ரோல் நிலையங்களில் அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் நகர்ப் பகுதிகளிலும் இஸ்கந்தர் புத்திரியிலும் அமைந்திருப்பதாக ஜோகூர் உள்ளூர் வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சின் இயக்குநர் லிலிஸ் சாஸ்லிண்டா பொர்னோமோ தெரிவித்தார்.

“குழுக்கள் அந்தந்த இடத்திலிருந்தும் ரகசியமான முறையிலும் இயங்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும். குறிப்பாக தவறு நடக்கும் சாத்தியம் அதிகம் இருக்கும் பெட்ரோல் நிலையங்களுக்கு இது பொருந்தும்,” என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார். ரோன்95 பெட்ரோல் கடத்தப்படுவதை முறியடிக்க கண்காணிப்பு, அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இதற்கிடையே, பினாங்கு மாநிலத்தில் சலுகை விலையில் விற்கப்படும் எரிபொருள் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்படுவதன் தொடர்பில் எட்டு சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பினாங்கு உள்ளூர் வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சு எடுத்த நடவடிக்கைகளில் மொத்தம் 415,877.95 ரிங்கிட் (132,580.23 வெள்ளி) மதிப்பிலான சலுகை விலை எரிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த எட்டுச் சம்பவங்கள் இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றதாக பினாங்கு உள்ளூர் வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சு இயக்குநர் எஸ். ஜெகன் சொன்னார். ஐவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே காலகட்டத்தில் பினாங்கு மாநிலத்தில் மொத்தம் 215 பெட்ரோல் நிலையங்கள் சோதனையிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரோன்95 தொடர்பான கட்டுப்பாடு ஏப்ரல் ஒன்றாம் தேதி நடப்புக்கு வந்தது. அதையொட்டி விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய 126 பெட்ரோல் நிலையங்ளைக் கண்காணித்து வருவதாகவும் திரு ஜெகன் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்