பிலிப்பீன்சில் இணைய மோசடிக்கு எதிரான நடவடிக்கை: 244 வெளிநாட்டினர் கைது

பிலிப்பீன்சில் இணைய மோசடிக்கு எதிரான நடவடிக்கை: 244 வெளிநாட்டினர் கைது

படம்: பிக்சாபே

04 Oct 2026 - 3:19 pm

2 mins read

மணிலா: சட்டவிரோத இணையவழிச் சூதாட்ட நிறுவனங்களுக்கு எதிராக 2026ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களை பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அந்நாட்டின் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

மின்டனாவோ வட்டாரத்தின் தெற்குப் பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் பிலிப்பீன்ஸ் ராணுவமும் பிற சட்ட அமலாக்க அமைப்புகளும் அக்டோபர் 2ஆம் தேதி அதிரடிச் சோதனை நடத்தின.

அந்நடவடிக்கையின்போது 110 சீன நாட்டினர், இரண்டு கம்போடியர்கள், ஒரு ஹாங்காங் நாட்டவர் ஆகியோர் சோதனை மெர்கொள்ளப்பட்ட முதல் இடத்திலிருந்து கைது செய்யப்பட்டதாகப் பிலிப்பீன்ஸ் குடிநுழைவுத் துறை அக்டோபர் 3ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இரண்டாவது இடத்திலிருந்து 131 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள் என்றும் மலேசியா, இந்தோனீசியா, மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் கைது செய்யப்பட்டோரில் அடங்குவர் என்றும் அது குறிப்பிட்டது.

சோதனையின்போது பெருமளவிலான கணினி தொடர்புடைய கருவிகள், கைப்பேசிகள், மடிக்கணினிகள், சிம் அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக பிலிப்பீன்ஸ் குடிநுழைவுத் துறை கூறியது.

கைது செய்யப்பட்ட சிலரிடம் ஆள்கடத்தல் தொடர்பான குற்றச் செயல்கள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது. எஞ்சியோர் நாடு கடத்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தங்குமிட விதிமுறைகளை மீறும் வெளிநாட்டினருக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குடிநுழைவுச் சட்டங்களை அமல்படுத்துவோம். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தளமாகப் பிலிப்பீன்ஸ் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்வோம்,” என பிலிப்பீன்ஸ் குடிநுழைவுத் துறைத் தலைவர் ஜோயல் வியாடோ தெரிவித்தார்.

இந்தச் சோதனையை 2026ஆம் ஆண்டின் மிகப்பெரிய போகோஸ் நடவடிக்கை என அந்த அறிக்கை விவரித்தது.

ஆள்கடத்தல், கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கும் மோசடி, இணையவழி மோசடி, கொலை போன்ற குற்றச் செயல்களுக்கு பிலிப்பீன்சில் 'போகோஸ்' என்றழைக்கப்படும் இணையவழிச் சூதாட்ட நிறுவனங்களைக் குற்ற கும்பல்கள் பயன்படுத்துவதாகக் கூறி, 2024ஆம் ஆண்டில் பிலிப்பீன்ஸ் அரசு அவற்றிற்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்வெளிநாட்டு ஊழியர்இணைய மோசடி