ஜோகூரில் சிங்கப்பூர் மிதிவண்டி ஓட்டி மாண்ட சாலையில் பிளவுகள்

1 mins read
84e78743-4fe3-4b54-9b90-35385fcc37fc
ஆடவர் மாண்ட சாலையில் ஏற்கெனவே பல பிளவுகள் ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாக மலேசியாவின் பொதுப் பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நன்டா லிங்கி தெரிவித்துள்ளார். பல கனரக வாகனங்கள் அடிக்கடி அவ்வழியாகச் சென்றதால் பிளவுகள் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: மலேசிய ஊடகம்

கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் கூலாய் நகரில் சிங்கப்பூரைச் சேர்ந்த மதிவண்டி ஓட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை மாண்டாோர்.

அவர் மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருந்தபோது சாலையில் விழுந்தார்.

அதையடுத்து, அவ்வழியாகச் சென்ற கனகர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.

இந்நிலையில், அந்த ஆடவர் மாண்ட சாலையில் ஏற்கெனவே பல பிளவுகள் ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாக மலேசியாவின் பொதுப் பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நன்டா லிங்கி தெரிவித்துள்ளார்.

பல கனரக வாகனங்கள் அடிக்கடி அவ்வழியாகச் சென்றதால் பிளவுகள் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சாலை இவ்வாண்டு மறுசீரமைக்கப்பட்டதாக அமைச்சர் நன்டா கூறினார்.

இருப்பினும், பல கனரக வாகனங்கள் அடிக்கடி அச்சாலையைப் பயன்படுத்துவதால் பிளவுகள் மீண்டும் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“அந்தச் சாலையைப் பராமரிக்கும் பணி மாநில அரசாங்கத்தின் பொறுப்பின்கீழ் வருகிறது. இருப்பினும், சாலையைப் பயன்படுத்துபவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் பொதுப் பணித்துறை அமைச்சு அதுகுறித்து அக்கறை கொள்கிறது,” என்று அமைச்சர் நன்டா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சாலையின் மேற்பரப்பை உடனடியாக மறுசீரமைக்கும்படி ஜோகூர் மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

சாலைகளில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றும் கனரக வாகனங்கள் பயன்படுத்தும் சாலைகளை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் நன்டா கேட்டுக்கொண்டார்.

மாண்டவரின் குடும்பத்தாருக்கு அவர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்