டாக்கா: பங்கு விலைகளில் முறைகேடு செய்தமைக்காக பங்ளாதேஷ் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு ஐந்து மில்லியன் டாக்கா (S$53,900) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பங்ளாதேஷ் பங்குச் சந்தை ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 24) ஓர் அறிக்கை மூலமாக இதனைத் தெரிவித்தது.
பாரமவுண்ட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலைகளைச் சூழ்ச்சித் திறத்துடன் ஷாகிப் மாற்றியமைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் தொடர்பில், ஷாகிப்பின் தொழிற்கூட்டாளி அபுல் காயர் ஹீருவிற்கு 2.5 மில்லியன் டாக்கா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே குற்றச்சாட்டு தொடர்பில் ஷாகிப்பின் மோனார்ச் மார்ட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களுக்கும் ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
ஷாகிப்பிற்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பங்ளாதேஷ் அதிபர் பதவியிலிருந்து விலகி, நாட்டைவிட்டுத் தப்பியோடி ஷேக் ஹசினா தலைமையிலான அரசாங்கத்தில் ஷாகிப் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஷாகிப் ஒரு கொலை வழக்கிலும் சிக்கியுள்ளார். இவ்வாண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் பங்ளாதேஷில் போராடிய மாணவர்களைக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டார் எனச் சந்தேகிக்கப்பவதாக வழக்கு சார்ந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆயினும், அவர்மீதான குற்றம் உறுதிப்படுத்தப்படவில்லை. அவருக்கெதிராக கைதாணையும் பிறப்பிக்கப்படவில்லை.