ஜெனிவா: உக்ரேன் போரில் ஆட்களைக் கடத்திக் கொன்றதுடன், துன்புறுத்தல் என குடிமக்களை திட்டமிட்டு குறிவைத்துத் தாக்கிய ரஷ்யா மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளதாக ஐநா கூறுகிறது.
உக்ரேன் போர் தொடர்பாக ஐநா மேற்கொண்ட சுதந்திர விசாரணையின் முடிவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சுதந்திர விசாரணை அறிக்கை இந்த வாரம் வெளியானது. இந்த அறிக்கை ஐநாவின் அனைத்துலக மனித உரிமைகள் ஆணையத்தில் மார்ச் 18ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
“ரஷ்ய அதிகாரிகள் வேண்டுமென்றே ஆள்கடத்தல், பின்னர் அவர்களின் மறைவுக்குக் காரணமாக இருந்தது, அவர்களைக் கொடுமைப்படுத்தியது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்,” என்று அந்த அறிக்கை விவரித்தது.
“இவை யாவும் குடிமக்களுக்கு எதிராக பரவலான முறையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்,” என்று அறிக்கை தெரிவித்தது.
ஐநா விசாரணை அதிகாரிகள் இவ்வாறு ஆணித்தரமாக கூறுவது வழக்கமான ஒன்றல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டின்கீழ் பெருமளவிலான குடிமக்கள் வந்தனர் என்றும் பின்னர் அவர்கள் ரஷ்யா, உக்ரேன் ஆகிய இடங்களில் உள்ள தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டனர் என்பதையும் அறிக்கை சுட்டியது.
இவ்வாறு நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்ட குடிமக்கள் மீது மேலும் குற்றங்கள் இழைக்கப்பட்டன, மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அறிக்கை தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“இதில் பலர் மாத, ஆண்டுகணக்காக சிறை வைக்கப்பட்டதுடன் அவர்களில் சிலர் சிறை வைக்கப்பட்ட இடத்திலேயே மரணமடைந்தனர்,” என்று அறிக்கை விளக்கியது.
மேலும், தடுத்து வைக்கப்பட்டோர் பற்றிய விவரங்களை ரஷ்யா திட்டமிட்டே வழங்காமல் இருந்தது.
போரில் மறைந்தவர்களுக்கு எவ்வித சட்டப் பாதுகாப்பும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் ரஷ்யா இதைத் தெரிந்தே செய்ததாக அறிக்கை கூறுகிறது.

