பாலித் தீவில் குற்றச்செயல்கள்; கண்காணிப்பை வலுப்படுத்தும் அதிகாரிகள்

பாலித் தீவில் குற்றச்செயல்கள்; கண்காணிப்பை வலுப்படுத்தும் அதிகாரிகள்

2 mins read
1209bead-191e-4c43-81c4-5ceb369fb6c6
இந்தோனீசியாவின் பாலித் தீவில் காவல்துறை அதிகாரிகள் குற்றக் கண்காணிப்பை வலுப்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

டென்பசார்: பாலித் தீவில், அனைத்துலகக் கும்பல்களுடன் தொடர்புடைய குற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அடுத்து பிரபல சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லும் செமின்யாக், சாங்கு, உபுட், சானுர், நுசா டுவா ஆகிய இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் பாலிக் காவல்துறைத் தலைமை ஆய்வாளர் டேனியல் ஆதித்யஜெயா.

“குற்றச் சம்பவங்கள், நடவடிக்கைகள் குறித்து குடிமக்களும் சுற்றுப்பயணிகளும் புகார் அளிக்க, 24 மணிநேரமும் செயல்படும் அவசர தொடர்பு எண்ணைக் காவல்துறை தொடங்கியுள்ளது. அந்த அவசர எண் பல மொழிகளில் சேவை வழங்கும்,” என்றார் திரு டேனியல்.

கடந்த மார்ச் மாதம், பாலியில் ‘சக்ரா கண்காணிப்பு’ என்ற வெளிநாட்டினருக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்மூலம் பாலித் தீவுக்கு வந்துசெல்லும் வெளிநாட்டினரை அதிகாரிகளால் இணையம்வழி கண்காணிக்க முடியும்.

அனைத்துலகக் கும்பல்கள், குழுக்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் பாலியில் அண்மையில் நிகழ்ந்துள்ளன.

கடந்த மார்ச் 23ஆம் தேதி, பிரபல சுற்றுலாத் தலமான கூட்டாவில் தங்கும் விடுதிக்குக் காதலியுடன் திரும்பிவந்துகொண்டிருந்த ரெனே பாவ் என்ற டச்சு நாட்டவர் குத்திக் கொல்லப்பட்டார்.

35 வயது டார்லன் புருனோ லிமா சனந்தான, 28 வயது கலில் ஹியோரன் ஆகிய இரண்டு பிரேசிலிய ஆடவரே கொலைக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்தை அடுத்து இருவரும் இந்தோனீசியாவைவிட்டுத் தப்பியோடியதாக நம்பப்படுகிறது. அவர்களைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் அனைத்துலகக் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட திரு பாவ், சொந்த நாட்டில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய பிரபல குற்றவாளி என்று டச்சு ஊடகம் சொன்னதாகச் சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளேடு சொன்னது.

அதற்குமுன் பிப்ரவரி 15ஆம் தேதி, ஜிம்பாரான் வட்டாரத்தில் 28 வயது உக்ரேனியச் சுற்றுப்பயணி இகோர் கொமாரோவ், நண்பர்களுடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது வெளிநாட்டுக் கும்பலால் கடத்தப்பட்டார்.

அதையடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி, சுகாவாட்டி வட்டாரத்திற்கு அருகில் உள்ள கெட்டெவெல் கடற்கரையில் கைகால்கள் வெட்டப்பட்டு அழுகிய நிலையில் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அது காணாமற்போன கொமாரோவ்வின் உடல் என்று பின்னர் உறுதிசெய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
பாலித்தீவுகுற்றச்செயல்கொலைபாதுகாப்புகண்காணிப்பு