பகடிவதை குற்றங்கள்: மலேசிய ராணுவத்தில் இருந்து 41 பேர் பணி நீக்கம்

2 mins read
710ad970-ad1d-470f-bedf-dc18d97bfe5a
பகடிவதை, துன்புறுத்தல் போன்ற செயல்களுக்கு மலேசிய ராணுவத்தில் இடமில்லை என்று ராணுவத் தளபதி முகம்மது ஹபிசுதீன் கூறினார்.  - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசிய ராணுவத்தில் பகடிவதை, துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 41 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு முதல் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மலேசிய ராணுவத் தளபதி முகம்மது ஹபிசுதீன் ஜந்தன் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) தெரிவித்தார்.

நல்ல உயர் பொறுப்பில் இருந்தவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவர்கள் கீழ்நிலை ஊழியர்களை அச்சுறுத்தியதாக நம்பப்படுகிறது.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 29 பேர் ராணுவ வீரர்கள். மற்ற 12 பேர் மேஜர்கள், லெப்டினன்ட்கள், அதிகாரிகள் ஆவர்.

“பகடிவதை, துன்புறுத்தல் போன்ற செயல்களுக்கு மலேசிய ராணுவத்தில் இடமில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்று ராணுவத் தளபதி முகம்மது ஹபிசுதீன் கூறினார்.

குற்றச் செயலில் ஈடுபடுபவர் உயர் அதிகாரியா, கீழ்நிலை ஊழியரா என்ற பாகுபாடு இல்லை. அனைவர்மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பகடிவதை, துன்புறுத்தல் போன்ற செயல்கள் ராணுவத்திற்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கை என்று திரு முகம்மது ஹபிசுதீன் தெரிவித்தார்.

அண்மையில் 21 வயது ராணுவ வீரர் முகம்மது முக்ரிஸ் அசேரி பகடிவதை காரணமாக மாண்டதாக நம்பப்படுகிறது. அது குறித்து அவர் பேசினார்.

அசேரிக்கு நடந்தது வருத்தம் தரும் ஒன்று. அது ராணுவத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சம்பவம் என்னையும் பாதித்தது என்று ராணுவத் தளபதி முகம்மது ஹபிசுதீன் தெரிவித்தார்.

அசேரியைத் துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் தடுப்புக்காவலில் இருப்பதாகவும் திரு முகம்மது ஹபிசுதீன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்