தென்கொரிய அதிபர் யூன் மீது குற்றவியல் வழக்குப் பதிவு

2 mins read
153a9a7a-5c53-4de8-9376-146fbcab851d
தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோலின் முகத்தை சித்திரிக்கும் அட்டைப் பலகையை ஏந்திய எதிர்ப்பாளர்கள் சோலில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே அவரை பதவி நீக்கம் செய்ய விடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீது அந்நாட்டின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 8) தெரிவிக்கப்பட்டது.

திரு யூன், ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தியது குறித்த விசாரணையின் தொடர்பில் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரு யூன் பதவி விலகப்போவதாக ஞாயிற்றுக்கிழமையன்று முன்னதாக அவரின் ஆளும் கட்சித் தலைவர் அறிவித்தார். பதவி விலகும்வரை திரு யூன், உள்துறை, வெளியுறவு விவகாரங்களில் ஈடுபடமாட்டார் என்றும் ஆளும் மக்கள் சக்திக் கட்சித் (People Power Party) தலைவர் ஹான் டோங்-ஹூன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

திரு யூன், இம்மாதம் மூன்றாம் தேதியன்று சிறிது நேரத்துக்கு ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. அதனையொட்டி சனிக்கிழமையன்று (டிசம்பர் 8) அவர் மீது நடத்தப்பட்ட கண்டனத் தீர்மானம் தோல்வியடைந்தது.

அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமையன்று கட்சித் தலைவர் ஹான் டோங்-ஹூனும் தென்கொரியப் பிரதமர் ஹான் டுக்-சூவும் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் திரு யூன் பதவி விலகப்போவதை அறிவித்தனர்.

“அரசாங்கம் அடக்கத்துடன் இயங்கும். ஒத்துழைக்குமாறு நாடாளுமன்றத்தை வேண்டுகிறோம்,” என்றார் திரு ஹான்.

“உள்நாட்டு விவகாரங்கள் நிர்வகிக்கப்படுவதில் இடையூறுகள் வரக்கூடாது,” என்றும் அவர் சொன்னார். தற்போது நிலவும் நிலையற்ற அரசியல் சூழலில் ஆக்ககரமான முறையில் ஆட்சி செய்யும் நோக்குடன் வரவு செலவுத் திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் அளிப்பது முக்கியத்துவம்வாய்ந்தது என்று திரு ஹான் வலியுறுத்தினார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை முன்னாள் தென்கொரிய தற்காப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியுன் கைதுசெய்யப்பட்டார் என்று அந்நாட்டின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. அதிபர் யூன் ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தியதில் முக்கியப் பங்கு இருந்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் திரு கிம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்துமாறு திரு யூனுக்கு அறிவுரை வழங்கியதன் மூலம் எதிர்ப்புக் குரலை எழச் செய்ததாக நம்பப்படுவதன் தொடர்பில் திரு கிம் கைது செய்யப்பட்டார் என்று தி கொரிய ஹேரல்ட் (The Korea Herald) ஊடகம் செய்தி வெளியிட்டது. திரு கிம், ஆறு மணிநேரம் நீடித்த ராணுவ ஆட்சி சட்டத்தின் தொடர்பில் கைதாகியிருக்கும் முதல் நபர் என்றும் கொரிய ஹேரல்ட் குறிப்பிட்டது.

தென்கொரிய தேசிய காவல்துறையினர் திரு கிம்மின் அலுவலகத்தைச் சோதனையிட்டதாகவும் யோன்ஹாப் தெரிவித்தது. திரு யூன், இதர அமைச்சர்கள் நாட்டுக்கு துரோகம் இழைத்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அங்கமாக திரு கிம்மின் அலுவலகம் சோதனையிடப்பட்டது என்று காவல்துறை சொன்னது.

குறிப்புச் சொற்கள்