மத்திய கிழக்கு நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிய ஆசிய வங்கிகளுக்கு நெருக்கடி

மத்திய கிழக்கு நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிய ஆசிய வங்கிகளுக்கு நெருக்கடி

2 mins read
மத்திய கிழக்கு நிறுவனங்களுக்கு அதிக அளவில் மூலதனங்களை வழங்கியுள்ள சீனா பெரிதும் பாதிக்கப்படலாம் எனக் கணிப்பு
306453d1-2fc7-4453-ae29-be8ac54e7455
அபுதாபியின் தேசிய எண்ணெய் நிறுவனம் அட்நாக் (ADNOC) கடந்த 2025 நவம்பர் மாதம் அனைத்துலக பெட்ரோலியக் கண்காட்சியை நடத்தியபோது எடுக்கப்பட்ட படம். - படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: பில்லியன்கணக்கில் மத்திய கிழக்கு நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய ஆசிய வங்கிகள் தற்போது அவ்வட்டாரத்தில் நிலவும் போர் பதற்றத்தால் நெருக்கடியில் உள்ளன.

ஆசியாவையும் சீனாவையும் சார்ந்த வங்கிகள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியோரில் உச்ச நிலையில் உள்ளன. ஏறத்தாழ S$19 பில்லியனுக்கு (US$15 பில்லியன்) மேல் அவை கடந்த 2025ஆம் ஆண்டில் கடன் வழங்கியுள்ளன.

சவூதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் அவற்றின் மூலதனங்கள் அதிகம் சென்றன. இதன் விவரங்களை புளூம்பர்க் செய்தி நிறுவனம் சேகரித்துள்ள தரவுகள் காட்டுகின்றன.

ஈரான் பூசல் தற்போது தலைதூக்கியுள்ளதால், மத்திய கிழக்கு நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் உத்திகளும் அவ்வட்டாரத்தில் வர்த்தகம் செய்யும் வாய்ப்பும் சோதனைக்கு உட்பட்டுள்ளன.

வெளிநாட்டு மூலதனங்களை எதிர்பார்த்து கட்டமைக்கப்பட்டுள்ள சவூதி அரேபியாவின் S$2.5 டிரில்லியன் (US$ 2 டிரில்லியன்) பொருளியலையும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் உட்கட்டமைப்புத் திட்டங்களையும் மத்திய கிழக்குப் போர் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.

ஐக்கிய அரபுச் சிற்றரசின் தேசிய எண்ணெய் நிறுவனமான அட்நாக் (ADNOC) சீன மூலதனத்தோடு அறிமுகப்படுத்தவிருந்த நிதிப் பத்திரத் திட்டத்தை ஒத்திவைத்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான அந்நிறுவனத்துக்கு S$2.6 பில்லியன் அத்திட்டத்தின் வழியாக திரட்டப்பட்டிருக்கும் என்று அறியப்படுகிறது.

போர் தொடர்ந்தால், கட்டுப்பாட்டுடன் கடன் வழங்கி, அதிக வட்டியை வங்கிகள் எதிர்பார்க்கலாம் ஆனால் முற்றிலுமாக அவர்கள் மத்திய கிழக்கைவிட்டுச் செல்வர் என்று கூறமுடியாது என்று நிதி நிபுணர்கள் கருதுகின்றனர்.

சில முதலீட்டாளர்கள், மத்திய கிழக்கு நிறுவனங்களுக்கு அதிக அளவில் மூலதனங்களை வழங்கியுள்ள சீனா பெரிதும் பாதிக்கப்படலாம் எனவும் கணிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்