கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சுதந்திர சதுக்கத்துக்கு (Independence Square) எதிரே இருக்கும் சுல்தான் அப்துல் சமாத் கட்டடம் அண்மையில் வார இறுதியில் காலை ஒன்பது மணிக்குத் திறக்கப்பட்டபோதே டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக மக்கள் அங்கு படமெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மக்கள் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அக்கட்டடத்திற்குள் போக முடிந்தது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியர் அலுவலகங்கள் அக்கட்டடத்தில் இருந்தன. பின்னர் மலேசிய நீதிமன்றங்கள் அங்குச் செயல்பட்டன.
கட்டடத்தை நேரில் கண்டு ‘ஆராய’ மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு மத்திய கோலாலம்பூரில் உள்ள செரி நெகிரி மாளிகை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. அங்குதான் மலேசிய சுதந்திரத்துக்கு வழிவகுத்த ஒப்பந்தம் 1957ஆம் ஆண்டு கையெழுத்தானது.
காலனித்துவக் கட்டடங்கள் பொது இடங்களாகவும் கலாசாரச் சின்னங்களாகவும் உருவெடுப்பதை இந்தப் போக்கு சித்திரிக்கிறது.
செரி நெகிரி மாளிகை மீண்டும் மலேசிய அரசியலில் அங்கம் வகிக்கத் தொடங்கிவிட்டது. மலேசியாவுக்கு சிறப்பு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) இஃப்தார் உணவு விருந்து அளித்தார்.
வாரிசான் கேஎல் எனும் திட்டத்தின்கீழ் காலனித்துவக் கட்டடங்களை மறுபடியும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 600 மில்லியன் ரிங்கிட் (195 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான இத்திட்டம், ‘மலேசியாவுக்கு வாருங்கள் 2026ஆம் ஆண்டு’ (Visit Malaysia Year 2026) இயக்கத்துக்காகத் தலைநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்சங்களுக்கு உயிரூட்டும் முயற்சியாகும்.
கசானா நேஷனல் நிதி, வாரிசான் கேஎல் திட்டத்தை நடத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
47 மில்லியன் சுற்றுப்பயணிகளை வரவேற்பது மலேசியாவின் இலக்கு. சமூகத் திட்டங்கள், நடமாடுவதற்கான கூடுதல் பகுதிகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் கலாசார இடங்களுக்கு உயிரூட்ட கசானா நேஷனல் எண்ணம் கொண்டுள்ளது.

