ஜார்ஜ் டவுன்: தென்கிழக்காசிய வட்டாரத்தில் மலேசியாவின் சொகுசுக் கப்பல் சுற்றுப்பயணங்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்வதன்மூலம் மலேசியப் பொருளியல் மேலும் வலுப்பெறும் என்றும் உள்ளூர் சமூகங்கள் மேம்படும் என்றும் அவர் கூறினார்.
சொகுசுக் கப்பல் சுற்றுப்பயணங்கள் சுற்றுலாப் பயணிகளை மட்டும் ஈர்க்க அல்ல. அதன்மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார் திரு லோக்.
“சொகுசுக் கப்பல் சுற்றுப்பயணங்கள் அதிகரித்தால் உள்ளூர் கலாசாரம் மற்றும் மரபுகள் குறித்து சுற்றுப்பயணிகள் அறிந்துகொள்வார்கள், மலேசியாவை உலக மக்கள் மேலும் அறிவார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சொகுசுக் கப்பல் சுற்றுப்பயணங்களை வழங்கும் நிறுவனங்கள் மலேசியாவை ஓர் இடைநிலை நிறுத்த இடமாக (டிரான்சிட்) பார்க்காமல் முதன்மை இடமாகப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் லோக் கேட்டுக்கொண்டார்.
கப்பல் பயணங்கள் மலேசியாவிலிருந்து தொடங்கி மலேசியாவில் முடிவது போன்ற சேவைகளை நிறுவனங்கள் வழங்க வேண்டும், அதற்கான தடவாள வசதிகள், நீண்ட நாள் ஒத்துழைப்பு போன்றவை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

