அமெரிக்க நெருக்குதலால் உலக நாடுகளின் உதவியை நாடுகிறது கியூபா

அமெரிக்க நெருக்குதலால் உலக நாடுகளின் உதவியை நாடுகிறது கியூபா

2 mins read
c3877cad-3348-4b8a-a68f-8a1066827d85
தலைநகர் ஹவானாவில் மின்துண்டிப்பின்போது இருட்டில் நடந்துசென்ற மக்கள். - படம்: இபிஏ

நியூயார்க்: கியூபாவில் பேரிடர் ஏற்படுவதைத் தவிர்க்க உடனடியாக உதவ வருமாறு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் புரூணோ ரோட்ரிகஸ் பரில்லா உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (மே 26) ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தில் பேசியபோது அவர் அந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

“ஆயுதங்கள் அல்லது எரிபொருள் முற்றுகையின் மூலம் ஏற்படக்கூடிய மனிதநேயப் பேரழிவைத் தடுக்க அனைத்துலகச் சமூகம் அணிதிரள அழைப்புவிடுக்கிறேன்,” என்று திரு ரோட்ரிகஸ் கூறினார்.

உலக நாடுகள் கியூபாவுக்கு ஆதரவு தரவேண்டிய நேரம் இது என்று அவர் சொன்னார்.

அமெரிக்கா இவ்வாண்டு (2026) ஜனவரியில், வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தது. அந்நாட்டு அதிபர் நிக்கலஸ் மடுரோவை அது பதவியிலிருந்து அகற்றியது.

வெனிசுவேலாவுக்குப் பிறகு கியூபாவைக் குறிவைக்கப்போவதாக அப்போதே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெளிப்படையாகக் கூறியிருந்தார். அதன் பின்னர், வெனிசுவேலாமீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு அங்குப் பெரிய மாற்றம் ஏற்படக்கூடும் என்ற கருத்தும் நிலவிவருகிறது.

1959ஆம் ஆண்டு ஃபிடெல் காஸ்ட்ரோ பதவிக்கு வந்த பிறகு, அமெரிக்கா அந்நாட்டின்மீது வர்த்தகத் தடைகளை விதித்தது. அதிலிருந்தே கியூபாவில் பல ஆண்டுகளாகப் பொருளியல் நிலவரம் மோசமாக உள்ளது. உணவு, மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு அங்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.

கியூபாவில் நாடு முழுதும் மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கமான ஒன்று.

வெனிசுவேலாவில் திரு மடுரோவை அகற்றிய பிறகு, அங்கிருந்து கியூபாவுக்குச் சென்ற எண்ணெய் விநியோகத்தைத் திரு டிரம்ப் தடுத்துநிறுத்தினார்.

1996ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரண்டு சிறிய விமானங்களைச் சுட்டுவீழ்த்தியதில் கியூபாவின் அப்போதைய ஆயுதப் படைத் தலைவர் ராவுல் காஸ்ட்ரோவுக்குப் பங்கிருந்ததாக டிரம்ப் நிர்வாகம் சென்ற வாரம் குற்றஞ்சாட்டியது. அதன் காரணமாக அமெரிக்கா, கியூபாவின் தற்போதைய அரசாங்கத்தை அகற்றக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவும் கியூபாவில் கம்யூனிச ஆட்சியை மாற்றுவதில் அமெரிக்கா கவனம் செலுத்தப்போவதாக எச்சரித்திருந்தார்.

செவ்வாய்க்கிழமை (மே 26) அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளைத் திரு ரோட்ரிகஸ் மறுத்தார். அரசியல் காரணங்களுக்காக அமெரிக்கா அவ்வாறு செய்வதாய் அவர் சொன்னார்.

அமைதியாக வாழ்வதற்குக் கியூபாவை அனுமதிக்குமாறு பாதுகாப்பு மன்றத்தில் அவர் கோரிக்கை விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்