சோல்: தென்கொரியாவில் பாலியல் குற்றங்களைப் புரிந்த 24 வயது ஆடவர் ஒருவருக்கு சோல் உயர் நீதிமன்றம் ஏழாண்டுச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அந்த ஆடவர் புரிந்த குற்றங்களில் ஒன்று, துணி துவைக்கும் சலவை இயந்திரத்தின் கண்ணாடியில் தெரிந்தது. அதை, விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியில் பார்த்ததைத் தொடர்ந்து அக்குற்றம் நிரூபணமானது.
குற்றம் பதிவான காணொளி, அதன் ஒலி, படத்தின் தரம் ஆகியவை மேம்படுத்தப்பட்டு ஆராயப்பட்டன. பின்னர் ஆடவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள நேரிட்டது.
பாலியல் வன்கொடுமை, பாலியல் ரீதியான தாக்குதல், வயது குறைந்த ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டது உள்ளிட்ட குற்றங்களை ஆடவர் புரிந்தார் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றில் நிரூபிக்கப்பட்டது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் ஏழு ஆண்டுகளுக்குக் காலில் மின்னணுவியல் கண்காணிப்புக் கருவியை (electronic tracking anklet) அணியவேண்டும் என்று குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டது.
அதோடு, சிறார், உடற்குறையுள்ளோர் ஆகியோருக்கான நிலையங்களில் பணியாற்றவும் அவருக்கு ஏழு ஆண்டுத் தடை விதிக்கப்பட்டது.
மாவட்ட நீதிமன்றம் ஒன்று குற்றவாளிக்கு முதலில் எட்டு ஆண்டுச் சிறை விதித்தது. பிறகு சோல் உயர் நீதிமன்றம் சற்று குறைவாக அவருக்கு ஏழாண்டுச் சிறை விதித்தது.

