கோலாலம்பூர்: மலேசியாவைக் குறிவைத்த மூர்க்கமான, நூதன முறையிலான இணையத் தாக்குதல்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இவ்வாண்டில் முதல் ஆறு மாதங்களில் 2,366 இணையத் தாக்குதல்கள் பதிவாகின. இந்தத் தகவலை மலேசியாவின் இணையப் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டது.
முக்கிய உள்கட்டமைப்புகள், கழகங்கள் மட்டுமல்லாது எளிதில் பாதிப்படையக்கூடியவர்களும் குறிவைக்கப்படுவதாக ஆணையத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் மெகாட் ஸுஹாய்ரி மெகாட் தஜுதீன் கூறினார்.
சிறார், மூத்தோர், இணையப் பயன்பாட்டில் அனுபவமற்றவர்கள் ஆகியோரைக் குறிவைத்து இணையம் வழித் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 25) நடைபெற்ற இணையப் பாதுகாப்பு உச்சநிலை மாநாட்டில் பேசியபோது டாக்டர் மெகாட் தெரிவித்தார்.
மலேசியாவின் மின்னிலக்க எதிர்காலத்தைப் பாதுகாப்போம் என்ற கருப்பொருளுடன் உச்சநிலை மாநாடு நடத்தப்பட்டது. அதற்கு ஸ்டார் மீடியா குழுமம் ஏற்பாடு செய்தது.
2024ஆம் ஆண்டில் 4,626 இணையத் தாக்குதல்கள் பதிவானதாக டாக்டர் மெகாட் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 43 விழுக்காடு அதிகம்.
இந்நிலையில், இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே 2,366 இணையத் தாக்குதல்கள் பதிவாகிவிட்டதைச் சுட்டிய டாக்டர் மெகாட் இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
இணையத் தாக்குதல்களுக்கு எதிரான தற்தாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

