மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான நிறுவனம், அதன் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு வழங்கப்படும் குறுகியகால போனஸை 15 விழுக்காடு குறைத்துள்ளது.
இவ்வாண்டு இணைய ஊடுருவலில் மில்லியன் கணக்கான பயணிகளின் விவரங்கள் இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரதான விமான நிறுவனமான அது, ஜூலையில் வாடிக்கையாளர் அழைப்பு நிலையம் ஊடுருவப்பட்டதாகவும் பயணிகளின் பெயர், மின் அஞ்சல், தொலைபேசி எண், பிறந்த தேதி, அடிக்கடி பயணம் செய்வோரின் எண்கள் உட்பட ஆறு மில்லியன் தகவல்கள் திருடப்பட்டதாகவும் கூறியிருந்தது.
“இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை சிறிது காலத்திற்கு இறுதி செய்யப்படாமல் இருக்கலாம்.
“ஆனால் இதன் விளைவுகளை இவ்வாண்டு கையாள்வது எங்கள் நிர்வாகிகள் மற்றும் பங்குதாரர்கள் இருவருக்கும் முக்கியம்,” என்று குவாண்டாஸ் செப்டம்பர் 5 அன்று வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவித்தது.
போனஸ் குறைப்பு, நிர்வாகிகளுக்கு உள்ள பொறுப்பை உணர்த்துகிறது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.
குவாண்டாஸ் தலைமை நிர்வாக அதிகாரி வனிஸா ஹட்சனின் ஜூன் 30 வரையிலான இவ்வாண்டுக்கான குறுகியகால போனஸ் 250,000 ஆஸ்திரேலிய டாலர் (S$210,280) குறைக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் திருவாட்டி ஹட்சன், இவ்வாண்டு 6.3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரை ஊதியமாகப் பெற்றுள்ளார். இது, ஓராண்டுக்கு முந்திய A$4.4 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2025 நிதியாண்டில் குவாண்டாசின் லாபமும் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்கு கூடியுள்ளது.