சோல்: கொரிய தேசிய அரசதந்திரக் கழகம் மீது நடத்தப்பட்ட இணையத் தாக்குதலில், தென்கொரிய அரசதந்திரிகள் அனைவரின் தனிப்பட்ட விவரங்கள் சில கசிந்துள்ளன.
அதையடுத்து, தென்கொரிய வெளியுறவு அமைச்சு தனது அரசதந்திரிகளின் மின்னஞ்சல் முகவரிகளை மாற்றவிருக்கிறது.
மிகப்பெரிய பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்தைத் தொடர்ந்து, அரசதந்திரிகளின் மின்னஞ்சல் முகவரிகளை மாற்றுவதற்கான நேரம், அதனைச் செயல்படுத்தும் விவரங்கள் ஆகியவற்றை அமைச்சு பரிசீலித்து வருவதாக வியாழக்கிழமை (ஜூலை 23) தெரிவிக்கப்பட்டது.
அந்த இணையத் தாக்குதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரை 10 மாதக் காலகட்டத்தில் நடத்தப்பட்டது. அதில், தென்கொரிய அரசதந்திரிகள் அனைவரும் உட்பட கொரிய தேசிய அரசதந்திரக் கழகத்தைச் சேர்ந்த பயனர்களின் பெயர்கள், அடையாளங்கள், மின்னஞ்சல் முகவரிகள் அடங்கிய ஏறக்குறைய 10,000 பதிவுகள் கசிந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கசிந்த மின்னஞ்சல் முகவரிகளால் கணக்குகள் நேரடியாகப் பாதிக்கப்படாவிட்டாலும், குறிப்பிட்ட நபர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் மின்னஞ்சல் தாக்குதல்களுக்கு அவை பயன்படுத்தப்படலாம் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
அத்தகைய தாக்குதல்கள், வெளிநாட்டு அதிகாரிகளுடனான அதிகாரபூர்வத் தொடர்புகளில் உள்ள நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

