சிட்னி: நியூசிலாந்தின் வடக்குத் தீவை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) சூறாவளி தாக்கியதில், ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மின்சாரமின்றித் தவிக்கின்றனர்.
அதோடு, நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிலைமை மோசமடையக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
‘வையானூ’ எனும் அந்தச் சூறாவளி பிற்பகல் வேளையில் தாக்கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதற்கு முன்னதாகவே அது மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்திலான காற்று, கனமழை ஆகியவற்றைக் கொண்டுவந்ததாக தேசிய வானிலை ஆய்வகம் கூறியது.
அதிகாரிகள் சில வட்டாரங்களில் அவசரநிலையை அறிவித்துள்ளனர். அதோடு, அவர்கள் அபாயகரமான பலத்த காற்று தொடர்பான ‘சிவப்பு’ விழிப்புநிலை எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளனர். அத்தகைய நிலை மிக மோசமான வானிலைக்காக மட்டுமே பிறப்பிக்கப்படும்.
சூறாவளி வடக்குத் தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக அவசரநிலை நிர்வாக அமைச்சர் மார்க் மிட்சல் கூறினார். அது, கடலோரப் பகுதியைக் கடந்துசெல்லும்போது மேலும் வலுவான காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை, கிட்டத்தட்ட 5,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் ஏறக்குறைய 2,000 வீடுகளில் மின் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மீட்புப் பணிகளில் உதவ, நியூசிலாந்துத் தற்காப்புப் படை உறுப்பினர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கனரக இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நூற்றாண்டில் நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘கேப்ரியல்’ சூறாவளி 2023ஆம் ஆண்டில் நேர்ந்தது. அதில் 11 பேர் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

