பேராக்: சளிக்காய்ச்சலுக்காக மருத்துவரைக் காணச் சென்ற மூன்று வயது சிறுமிக்கு, இதயத் துடிப்பைத் துரிதப்படுத்தும் ஊசி ஒன்று செலுத்தப்பட்டதை அடுத்து கண்பார்வை இழந்து சிறுமி உயிரிழந்தார்.
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இச்சம்பவம் பிப்ரவரி 25ஆம் தேதி காலை சுமார் 9 மணியளவில் நிகழ்ந்ததாக மலேசியாவின் சின் சியூ டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
மருத்துவரிடம் ஆலோசனையும் மருந்தும் பெறுவதற்காகச் சிறுமி சென்றிருந்தபோது, அவரின் உடலில் நீர் பற்றாக்குறையாக உள்ளது என்று கூறி, ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள ஊசி ஒன்றைப் போட்டாக வேண்டும் என்றார் மருத்துவர்.
இருப்பினும், ஊசியின் வழியாக அதிகளவு திரவம் அச்சிறுமியின் உடலில் ஏற்றப்பட்டதாகக் குறிப்பிட்ட சிறுமியின் அத்தை, இதனால் சிறுமியின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 180 என அதிகரித்துவிட்டதாகத் தெரிவித்தார்.
அதையடுத்து, கண்பார்வை மங்கிவிட்டதாகவும் பின்னர் ஒரே இருட்டாக இருப்பதாகவும் சிறுமி கூறத் தொடங்கினார்.
“அப்பா, என்னால் எதையும் பார்க்க முடியவில்லை,” என்று நடுங்கிக்கொண்டும் அழுதுகொண்டும் சிறுமி அவரின் தந்தையிடம் கூறியதாக அந்த அத்தை நினைவுகூர்ந்தார்.
“சிறுமியின் இறுதி வார்த்தைகள் அவை என்று அப்போது எங்களுக்குத் தெரியாது,” என்றார் சிறுமியின் அத்தை.
ஊசிக்குப் பிறகு இரண்டு மணிநேரத்தில் சிறுமி உயிரிழந்தார். அவருக்கு 40 நிமிடங்களாக ‘சிபிஆர்’ சிகிச்சை செய்யப்பட்டும் பயனில்லாமல் போனது.
தொடர்புடைய செய்திகள்
சிறுமிக்கு ஏற்றப்பட்ட மருந்து குறித்து குடும்பத்தார் மருத்துவப் பணியாளர்களிடம் கேட்டபோது அது வழக்கமாகத் தரப்படும் மருந்து என்று அவர்கள் கூறினர். ஆனால், இதயத் துடிப்பைத் துரிதப்படுத்தும் ஊக்கமருந்து என்று பின்னர் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதற்கிடையே, சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணம், பாக்டீரியா தொற்று என மரண அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததைச் சிறுமியின் அத்தையால் நம்ப முடியவில்லை.
சிறுமி உயிரிழந்த மறுநாள் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.