தோக்கியோ: ஜப்பானின் வடக்குப் பகுதியில் 80க்கும் அதிகமான கட்டடங்களைச் சேதப்படுத்திய காட்டுத்தீயில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்தனர்.
இவாதே மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வனப் பகுதிகளில் கொளுந்துவிட்டெரியும் தீக் கங்குகளை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஜப்பானியச் செய்தி நிறுவனமான ‘என்எச்கே’யில் ஒளிபரப்பாளரான காட்சிகளில் வனப்பகுதியில் பல வீடுகள் கருகிச் சாம்பலாகி விட்டதைக் காட்டின.
தீயில் 600 ஹெக்டர் நிலப்பரப்பு சேதமாகிக்கி விட்டது. இதுவரை 2,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு விட்டதாக அப்பகுதியின் நகராட்சி மன்றம் கூறியது.
வியாழக்கிழமை (பிப்ரவரி 27) காலை நிலவரப்படி குறைந்தது 84 கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏறக்குறைய 500 வீடுகளின் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியின் ரயில் போக்குவரத்தின் ஒரு பகுதியின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். காட்டுத் தீ மூண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
2023ஆம் ஆண்டில் ஜப்பானெங்கும் ஏறத்தாழ 1,300 காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டன.