கோலாலம்பூர்: கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் வியாழக்கிழமை (செப்டம்பர் 11) காலை ஏற்பட்ட பதற்றமான சூழலில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
கம்போங் சுங்கை பாரு கிராமப் பகுதியில் சட்டவிரோதமாகக் குடியிருப்போரை அகற்ற காவல்துறை முயன்றபோது அங்கிருந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டு முகாம் ஒன்று அமைக்கப்பட்டு அந்தப் பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெளி ஆள்கள் யாரும் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டது.
பிற்பகலுக்குள் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டதற்குப் பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து வெளியே மறுப்பவர்களின் வீட்டின் கதவுகளை உடைக்கக் காவல்துறைக்கு உத்தரவு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில வீடுகளை இடிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, டாங் வாங்கி மாவட்டக் காவல்துறை உதவி ஆணையர் சுலிஸ்மீ அஃபென்டி சுலைமான் என்பவர் மீது அடையாளம் தெரியாத பொருள் ஒன்று வீசப்பட்டதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட அவர் காணப்படும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாயின.
சுங்கை பாரு கிராமத்தில் உள்ள வீடுகளை இடித்துவிட்டு உயர்மாடிக் கட்டடங்களை எழுப்புவதற்கான மேம்பாட்டுத் திட்டம் 2016ஆம் ஆண்டு தீட்டப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து அங்கு அனுமதி இன்றி குடியிருப்போரை அகற்றும் பணிகளை மேம்பாட்டாளர்கள் தொடங்கிய போதிலும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர்களை வெளியேற்ற ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.