கோத்தா கினபாலு: அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) தேசியக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சீர்திருத்தத் திட்டங்களில் போதுமான முன்னேற்றம் காணப்படாததன் தொடர்பில் நிலவும் கவலைகள் குறித்து அக்கூட்டத்தில் பேசப்படும் என்று கட்சியின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளர் சான் ஃபூங் ஹின் கூறியுள்ளார். சீர்திருத்தத் திட்டங்கள் முன்னேறாமல் இருப்பதற்கு ஒரு காரணம் நாடாளுமன்ற அளவில் போதுமான ஆதரவு இல்லாததாகும்.
ஆண்டுதோறும் நடக்கும் ஜசெக தேசியக் கூட்டத்தில் 4,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொள்வர். அடித்தள நிலையில் அதிருப்தி அதிகரித்துவரும் வேளையில், மூன்றரை ஆண்டுகளுக்குமேல் அரசாங்கத்தில் அங்கம் வகித்த பிறகு கட்சி எந்தப் பாதையில் செல்கிறது என்பதை உறுப்பினர்கள் ஆராய அந்தக் கூட்டம் வாய்ப்பை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தத் திட்டங்கள்
பிரதமருக்கான அதிகபட்ச தவணைக்காலத்தை 10 ஆண்டுகளாக விதிப்பது, அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் பொறுப்புகளைப் பிரிப்பது உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட சீர்திருத்தத் திட்டங்களில் இடம்பெறும். நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு இல்லாததால் அதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
போதுமான ஆதரவு இல்லாவிட்டால் முக்கியச் சீர்திருத்தத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது என்று திரு சான் குறிப்பிட்டார். விவாதங்கள், கட்சி செல்லும் பாதை தொடர்பான வாக்கெடுப்பு ஆகியவை ஜசெக சந்திப்பின்போது இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவை ஜசெகவின் உட்கட்சி ஜனநாயக நடைமுறையில் அங்கம் வகிக்கின்றன என்றும் அண்மை அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புடையவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் தற்போதைய அரசியல் சூழல் தெளிவற்று இருப்பதாக திரு சான் கருத்துரைத்தார். அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் முடிவுகளால் இந்நிலை உருவாகியுள்ளதாக அவர் சொன்னார்.
சாபா மாநிலத்தில் நிலைமை முற்றிலும் மாறுபட்டிருப்பதாகவும் திரு சான் கூறினார். தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அங்கு கட்சிகளின் நிலைப்பாடு தெளிவாக இருப்பது அதற்குக் காரணம் என்றார் அவர்.
சீர்திருத்தத் திட்டங்கள் போன்றவற்றுக்கு அனுமதி கிடைக்க அரசியல்ரீதியான தெளிவும் நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவும் சமமாகப் பெறப்படவேண்டும் என்றும் திரு சான் சுட்டினார்.


