தைப்பே: தைவானின் ஆக உயரமான கட்டடத்தில், எந்தக் கயிறும் பாதுகாப்புக் கருவிகளும் இன்றி ஏறிக்கொண்டிருந்த சாகசக்காரரைக் காண, பலர் அந்தக் கட்டடத்தைச் சூழ்ந்திருந்தனர்.
மேலும் பலர், நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நேரலை வழியாக இணைந்தனர்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு 40 வயது அலெக்ஸ் ஹானல்ட், ‘தைப்பே 101’ கட்டடத்தின் உச்சத்தைத் தொட்டார்.
அந்த 508 மீட்டர் கட்டடத்தில் வெற்றிகரமாக ஏறிய பின்னர், அவர் கயிற்றின் உதவியுடன் தம்மை மெல்லத் தரைக்கு இறக்கிக்கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஹானல்ட், நேரம் கரைந்துவிடக்கூடியது என்பதால் மக்கள் அதனைச் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
“நீங்கள் கடுமையாக உழைத்தால், கடினமானவற்றையும் செய்துவிடலாம்,” என்றும் அவர் கூறினார்.
உலகின் பல பகுதிகளில் கடினமான கற்பாறைகளில் வெற்றிகரமாக ஏறியுள்ளார் ஹானல்ட். கலிஃபோர்னியாவிலுள்ள யோசெமிட்டி (Yosemite) இயற்கைப் பூங்காவிலுள்ள ‘எல் கேப்பிட்டன்’ (El Capitan) பாறையில் ஏறிய பின்னர் 2017ல் அவர் உலகப் புகழை அடைந்தார்.
‘தைப்பே 101’ கட்டடத்தில் ஏறுவதைக் கனவாகக் கொண்டிருந்ததாக ஹானல்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கட்டடத்தில் ஏறுவதற்காக அவர் முதன்முதலாக அதிகாரிகளிடம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பின் இந்தக் கனவு நனவானது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கட்டடத்தின் உச்சத்தை அடைய ஹானல்ட் எடுத்துக்கொண்ட நேரம், 90 நிமிடங்கள். வெற்றிக்களிப்பில் அவர் தம் கரங்களை உயர்த்தியவாறு காணப்பட்டார்.
2004ல் ஆலன் ராபர்ட், இந்தக் கட்டடத்தின் மீது ஏறிய முதல் நபராக இருந்தார். இருந்தபோதும், மழை நேரத்தில் பாதுகாப்புக் கயிறுகளின் உதவியுடன் அவர் அச்சாதனையை வெற்றிகரமாக முடித்தார்.

