இஸ்கந்தர் புத்ரி: ஜோகூரில் இயங்கும் 19 தரவு நிலையங்கள் அம்மாநிலத்தின் சுத்திகரிக்கப்பட்ட நீர் உற்பத்தியில் 1.05 விழுக்காட்டை மட்டுமே பயன்படுத்துவதாக ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் முகம்மது ஃபஸ்லி முகமது சாலே தெரிவித்துள்ளார்.
அந்த நிலையங்கள் நாளொன்றுக்கு 73.088 மில்லியன் லிட்டர் நீர் கேட்டதாகவும் ஆனால் 21.277 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும் பொதுப்பணி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுத் தலைவரான அவர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) ஜோகூர் மாநிலச் சட்டமன்றத்தில் கூறினார்.
மேலும், ஜோகூர் சராசரியாக நாளொன்றுக்கு 2,034 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை உற்பத்தி செய்வதாகவும் அதில், வீட்டுப் பயன்பாட்டிற்கு 904 மில்லியன் லிட்டரும் தொழிற்சாலைகளுக்கு 635 மில்லியன் லிட்டரும் செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தரவு நிலையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு தொழிற்சாலை நீர்ப் பயன்பாட்டில் 3.35 விழுக்காடு மட்டுமே. இருப்பினும், எதிர்கால வீட்டு நீர்ப் பயன்பாடு பாதிக்கப்படாமல் இருக்க மாநில அரசாங்கம் விழிப்புடன் செயல்படுகிறது,” என்றார் திரு ஃபஸ்லி.
பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்களான பஹாருதீன் முகம்மது தைப், பாண்டக் அகமது, ஆர். குமரன் ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளித்த திரு ஃபஸ்லி, ஆற்று அணைகளின் நீர்மட்டம் குறைவதற்குத் தரவு நிலையங்கள் காரணம் என்ற தகவலை மறுத்தார்.
நீடித்த வறட்சியாலும் மார்ச் மாதம் உச்சமடையக்கூடிய எல் நினோ தாக்கத்தாலுமே நீர்மட்டம் குறைவதாக அவர் விளக்கினார்.
“மச்சாப், லெபாம், குனுங் பூலாய் 2, பொந்தியான் கெச்சில், மேல் லாயாங், கீழ் லாயாங் ஆகிய அணைகள் தரவு நிலையங்களுக்கு நீர் வழங்குவதில்லை. அனைத்து 19 நிலையங்களும் சுங்கை ஜோகூர், செமங்கார் நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தே நீரைப் பெறுகின்றன,” என்றார் அவர்.
மேலும், 2024ஆம் ஆண்டு ஏப்ரலில் 20 மாநில, கூட்டரசு அமைப்புகளை உள்ளடக்கிய தரவு நிலைய மேம்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை ஜோகூர் முதலில் அமைத்ததாகவும் பசுமைத் தொழில்நுட்பம், நீர், மின்சாரத் திறன் விதிமுறைகளைப் பூர்த்திசெய்யும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் நீர்ப் பயன்பாட்டைக் குறைக்கத் திறமையான குளிரூட்டும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
