$520 மி. சொத்துச் சர்ச்சையில் உயில் குறித்து மகள்கள் வழக்கு

ஜென்டிங் வாரிசுரிமை விவகாரம்:

$520 மி. சொத்துச் சர்ச்சையில் உயில் குறித்து மகள்கள் வழக்கு

2 mins read
3c25c614-c56a-4c6e-afd1-0ef55b754066
பாகாங்கில் உள்ள ஜென்டிங் ஹைலண்ட்ஸ். (2023ல் எடுக்கப்பட்ட படம்) - படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: ஜென்டிங் நிறுவனர் லிம் கோ டோங்கின் காலஞ்சென்ற மகள் சியூ கிம்மின் 1.6 பில்லியன் ரிங்கிட் ($520 மில்லியன்) சொத்தின் தொடர்பிலான இறுதி உயில் சந்தேகத்திற்குரிய சூழலில் நிறைவேற்றப்பட்டதாக அவரின் மகள்கள் வழக்குத் தொடுத்துள்ளனர். இறுதி உயிலில் மோசடி நடந்திருப்பதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

திருவாட்டி சியூ கிம்மின் உயிலைச் செல்லாததாக்க வேண்டும் என்று அவரின் மகள்கள் சான் ‌ட்ஷியாவ் லியும் கிம்பெர்லி சான் ட்‌ஷியாவ் மின்னும் அந்த வழக்கில் கோரிக்கை விடுத்துள்ளனர். நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் அதனைத் தெரிவித்தது.

திருவாட்டி சியூ கிம் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரின் 73ஆம் வயதில் காலமானார். அவர் நான்காம் நிலைக் கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உயிலில் கையெழுத்திடச் சட்ட ரீதியாகவும் மன ரீதியாகவும் தாயார் தயாராக இல்லை என்று மகள்கள் கூறுகின்றனர்.

இறுதி உயிலுக்கு முன்னர் வேறு இரண்டு உயில்கள் இருந்ததை அவர்கள் சுட்டினர். அதனால் இறுதி உயில் சந்தேகத்திற்குரிய சூழலில் நிறைவேற்றப்பட்டதாக மகள்கள் சந்தேகிக்கின்றனர்.

திருவாட்டி சியூ கிம் மரணமடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 28ல் இறுதி உயில் நிறைவேற்றப்பட்டது. அது சொத்துகளைப் பிரித்துக்கொடுப்பதைப் பெரிய அளவில் மாற்றியது.

இறுதி உயிலின்படி, சொத்தில் 70 விழுக்காட்டுக்கும் மேல், டிக்கிம் அறநிறுவனத்திற்குச் செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அறநிறுவனத்தைத் திருவாட்டி சியூ கிம்மும் அவரின் காலஞ்சென்ற கணவரும் தோற்றுவித்தனர்.

சியூ கிம்மின் மகன் மார்க்கஸ் சானுக்கு அதிக அனுகூலங்கள் கிடைத்துள்ளன. ஜென்டிங் சொத்தில் 30 விழுக்காடு, பங்குகள், மற்ற சொத்துகள் முதலியவை அவற்றுள் அடங்கும்.

ட்‌ஷியாவ் லிக்கு 900,000 ரிங்கிட்டும் ($292,000) கிம்பெர்லிக்கு 100,000 ரிங்கிட்டும் ($32,000) மட்டுமே கிடைத்தன.

உயிலை வரைந்த வழக்கறிஞர் லோ பெங் சூ, திங்கட்கிழமை சாட்சியமளித்தார்.

திருவாட்டி சியூ கிம் மருத்துவமனைப் படுக்கையில் இருந்தவாறு உயிலின் எல்லாப் பக்கங்களிலும் கையெழுத்திட்டபோது விழிப்புடன் இருந்ததாகத் திருவாட்டி லோ தெரிவித்தார். அவருக்கு என்ன செய்கிறோம் என்பது புரிந்திருந்ததாகவும் திருவாட்டி லோ குறிப்பிட்டார்.

டிக்கிம் நிறுவனத்துடன் தொடர்பிருப்பதால் மரணமடைந்தவரின் சொத்தில் அவர் ஆர்வம் காட்டுவதாக வழக்குத் தொடுத்தவர்கள் தெரிவித்தனர். திருவாட்டி லோ அதனை மறுத்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதி மஹாஸான் மாட் தாயிப், அடுத்த மாதம் (மார்ச்) 2ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்