$3 மில்லியனுக்கும் அதிகமான ‘கேஷ்பேக்’ சலுகைகளை வழங்கும் டிபிஎஸ்

$3 மில்லியனுக்கும் அதிகமான ‘கேஷ்பேக்’ சலுகைகளை வழங்கும் டிபிஎஸ்

2 mins read
ff94c7a0-48d9-46d5-9ecd-1d7fe816be5a
ஏப்ரல் 25ஆம் தேதியன்று பிளான்டேஷன் பிளாசாவில் இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் சிறப்பித்துப் பங்கேற்ற போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட சில பல்பொருள் அங்காடிகளில் வீட்டு அத்தியாவசியப் பொருள்களை வாங்கும் டிபிஎஸ் அல்லது பிஓஎஸ்பி அட்டைதாரர்கள் $3 தள்ளுபடியைப் பெறலாம் என்று கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கி அட்டைதாரர்கள் மற்றும் பேலா! பயனர்கள் $3 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ‘கேஷ்பேக்’காகப் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள் என சனிக்கிழமையன்று (ஏப்ரல் 25) தெரிவிக்கப்பட்டது.

மளிகைப் பொருள்கள், உணவு போன்ற அன்றாடத் தேவைகளுக்கான செலவுகளைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் வங்கியின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

ஏப்ரல் 25ஆம் தேதியன்று பிளான்டேஷன் பிளாசாவில் இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பித்த போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட சில பல்பொருள் அங்காடிகளில் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கும் டிபிஎஸ் அல்லது பிஓஎஸ்பி அட்டைதாரர்கள் $3 தள்ளுபடியைப் பெறலாம் என்று கூறினார்.

செப்டம்பர் மாதத்தில் சனிக்கிழமைகளில் உணவங்காடி நிலையங்கள் மற்றும் அக்கம்பக்கத்துக் கடைகளில் பேலா! மூலம் பணம் செலுத்துபவர்கள் $3 ‘கேஷ்பேக்’ பெறுவார்கள் என்று நிதித்துறையின் மூத்த துணை அமைச்சருமான திரு சியாவ் மேலும் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரின் விளைவாக ஏற்பட்ட விலையேற்றத்தைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் ஏப்ரல் 7ஆம் தேதி அரசாங்கம் $1 பில்லியன் மதிப்பிலான ஆதரவுத் திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிங்கப்பூரர்கள் செலவின நெருக்கடிகளைச் சமாளிக்க உதவுவதற்காக வங்கி ஒதுக்கியுள்ள $10 மில்லியனில் இந்த $3 மில்லியனும் ஒரு பகுதியாகும்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலமும், செயற்கை நுண்ணறிவுத் தீர்வு வழங்குநர்களுக்கான பரந்த அணுகலை வழங்குவதன் மூலமும் டிபிஎஸ் அவற்றுக்கு ஆதரவளிக்கும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் பயிற்சி ஆதரவைச் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கும் வங்கியின் ‘ஸ்பார்க்ஏஐ’ திட்டத்தின் மூலம் இது செயல்படுத்தப்படும்.

“நீடித்த நிலையற்ற தன்மையால் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், மற்றவர்களைக் காட்டிலும் சிலர் இதன் தாக்கத்தைக் கடுமையாக உணர்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்,” என்று டிபிஎஸ் சிங்கப்பூர் பிரிவின் தலைவர் லிம் ஹிம் சுவான் கூறினார்.

“இந்த ஆதரவுத் திட்டத்தின் மூலம், பொருளியலின் முதுகெலும்பாக விளங்கும் நமது சிறிய, நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன், அதிகமான மக்கள் தங்களது செலவுகளைச் சிக்கனப்படுத்திக்கொள்ள உதவுவதிலும் வங்கி உறுதியாக உள்ளது. ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வங்கியான டிபிஎஸ்/பிஓஎஸ்பி, நல்ல நேரங்களில் மட்டுமல்லாமல், அவசியமான தருணங்களிலும் முன்நின்று உதவ வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வழிநடத்தப்படுகிறது.”

“இந்த இக்கட்டான காலகட்டத்தை நாம் ஒன்றிணைந்து கடந்து செல்லும் வேளையில், எங்களின் இந்த ஊக்குவிப்பு முயற்சி, தேவையுள்ளவர்களுக்கு நடைமுறை ரீதியிலான ஆதரவை வழங்குவதற்கு ஒருவகையில் உதவும் என்று நம்புகிறோம்.” என்று டிபிஎஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்