சுவிட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்கா-ஈரான் அமைதி பேச்சுவார்த்தை திடீர் ரத்து

சுவிட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்கா-ஈரான் அமைதி பேச்சுவார்த்தை திடீர் ரத்து

3 mins read
அமெரிக்கா-ஈரான் இடையிலான நிரந்தரப் போர் நிறுத்த உடன்பாட்டில் சிக்கல்
41ab9ade-1aca-4b77-a0c9-8970cd162370
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் தமது சுவிட்சர்லாந்துப் பயணத் திட்டத்தைக் கைவிட்டுள்ளார். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்/துபாய்: மத்திய கிழக்கு வட்டாரப் போரை முற்றிலும் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சுவிட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) நடைபெறவிருந்த அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் தமது ஜெனீவா பயணத் திட்டத்தைக் கைவிட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால், இவ்வட்டாரத்தில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

“அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நிர்வாக, தளவாட ஏற்பாடுகள் எப்போதுமே எளிமையானதாக அல்லது கணிக்கக்கூடியதாக இருந்ததில்லை,” என்று வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் பகுதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது.

அது, ரத்து செய்யப்பட்டதை சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சும் உறுதிசெய்தது. ஆனால் அதற்கான விரிவான காரணங்களை அது வெளியிடவில்லை.

கடந்த புதன்கிழமை எட்டப்பட்ட 14 அம்ச இடைக்கால ஒப்பந்தத்தின்படி தற்காலிகப் போர்நிறுத்தம் மேலும் 60 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாக ஈரான் ஏற்கெனவே கூறியிருந்தது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து ஈரான் உடனடியாக எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

துணை அதிபர் வேன்சின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், “இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்கா செயல்படுத்துவதற்கான அறிகுறிகளை ஈரான் பேச்சுவார்த்தையாளர்கள் முதலில் கவனிக்க வேண்டும். ஈரானிய தூதுக்குழு ஜெனீவாவிற்குப் பயணம் மேற்கொள்ளுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை,” என்று குறிப்பிட்டிருந்தது.

சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா-ஈரான் இடைக்கால ஒப்பந்தத்திற்கான அதிகாரபூர்வ கையெழுத்து விழாவை நடத்தவும் அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், இருநாட்டு அதிபர்களும் ஏற்கெனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் மீண்டும் ஒரு விழா தேவையில்லை எனக் கூறிய ஈரானிய வெளியுறவு அமைச்சு இத்திட்டத்தின் மீது சந்தேகத்தை எழுப்பியிருந்தது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியன்று ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின. இந்தப் போரில், இதுவரை குறைந்தது 7,000 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இப்போரினால் உலகச் சந்தையில் எரிசக்தி விலைகள் அதிகரித்ததோடு உலகப் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

முன்னதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

வியாழக்கிழமை (ஜூன் 18) நள்ளிரவு அவர் சுவிட்சர்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளவதாக இருந்தது.

அணுசக்திப் பேச்சுவார்த்தைக்கான திட்டங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் பேச்சுவார்த்தைக்கான தளவாட, நிர்வாக ஏற்பாடுகளில் உள்ள சிக்கல்களே இதற்குக் காரணம் என்றும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை விளக்கமளித்தார். இருந்தாலும் வாய்ப்பு கிடைத்தவுடன் சுவிட்சர்லாந்து புறப்பட அமெரிக்கக் குழு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனும் ஜூன் 17ஆம் தேதி ஓர் இடைக்கால ஒப்பந்தத்தில் மின்னிலக்க முறையில் கையெழுத்திட்டனர். அதன் பிறகு ஜெனீவாவில் அமைதி பேச்சுவார்த்தையை நடத்த இரு நாடுகளும் முடிவு செய்திருந்தன. ஆனால் தற்போது இது நடக்காது எனத் தெரிகிறது.

முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவது, அந்நாட்டிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை அழிப்பது அல்லது அதன் வீரியத்தைக் குறைப்பது குறித்து இரு தரப்பும் விவாதிக்கவுள்ளன.

இருப்பினும், இவ்வளவு சிக்கலான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விவகாரங்களுக்கு 60 நாள்கள் என்ற காலக்கெடு போதுமானதாக இருக்காது என்று அணுசக்தி வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தேவைப்பட்டால் இந்த காலக்கெடுவை நீட்டித்துக் கொள்ள ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 18ஆம் தேதி டெஹ்ரானில் நடந்து சென்ற மக்கள்.  சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறித்து ஈரான் எதுவும்  தெரிவிக்கவில்லை.
ஜூன் 18ஆம் தேதி டெஹ்ரானில் நடந்து சென்ற மக்கள். சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறித்து ஈரான் எதுவும் தெரிவிக்கவில்லை. - படம்: ராய்ட்டர்ஸ்
குறிப்புச் சொற்கள்
அமெரிக்காடோனல்ட் டிரம்ப்சுவிட்சர்லாந்துசண்டை நிறுத்தம்