நியூயார்க்: அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டட வீட்டில் நீர் நிரப்பப்பட்ட குளிக்கும் தொட்டியில் ஆறு வயதுச் சிறுமி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7ஆம் தேதி) இறந்துபோன நிலையில் காணப்பட்டதாக காவல்துறை கூறியது.
சிறுமி மரணமடைந்ததற்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
சிறுமியின் கண்களில் ரத்தக் கட்டிகள் இருந்ததாகவும் அவர் போராடியதற்கான அறிகுறியாக அவை இருக்கலாம் என்றும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை தொடர்வதால் சிறுமியின் அடையாளத்தை காவல்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை. அத்துடன், சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
புரூக்ளின் நகரின் எல்டன் ஸ்திரீட்டில் உள்ள ஹைலண்ட் பார்க் பகுதியில் அந்தச் சிறுமி பிற்பகல் கிட்டத்தட்ட 1.30 மணிக்கு இறந்துபோன நிலையில் காணப்பட்டதாகக் காவல்துறை விளக்கியது. அச்சமயம், சிறுமியின் பெற்றோர் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

