காலாவதியான கைப்பேசி மென்பொருளால் ஆஸ்திரேலியாவில் மரணம்

1 mins read
50e85619-40d9-4222-b677-ca510aadd955
அவசர உதவி அழைப்பை கைப்பேசியின் மென்பொருள் பதிவுசெய்யாததால் வாடிக்கையாளர் மரணம் அடைந்துள்ளார் என்று ஆஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனம் டிபிஜி தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

அவசர உதவிக்கான ‘000’ என்ற எண்களை கைப்பேசி பதிவுசெய்யத் தவறியதால் வாடிக்கையாளர் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனம் டிபிஜி (TPG) செவ்வாய்க்கிழமை (நவம்பர்18) தெரிவித்துள்ளது.

சாம்சுங் வகை கைப்பேசியில் காலாவதியான மென்பொருள் இருந்ததே அதற்கான காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில், சிங்டெல் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆஸ்திரேலியாவில் இயங்கும் ஆப்டஸ் வழங்கிய தொலைபேசிச் சேவையில் தடை ஏற்பட்டது. அதன் விளைவாக அவசரச் சேவைகளின் உதவியை நாட முடியாமல் நால்வர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது கவனத்துக்குரியது.

அவசர உதவியை நாட குறிப்பிட்ட எண்களை அழைத்தபோது, டிபிஜியின் சேவை வழக்கநிலையில் இருந்துள்ளது. மின்தடைகளோ மற்ற கோளாறுகளோ எதுவும் ஏற்படவில்லை என்று அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில், சிட்னி நகரில் நவம்பர் 13 அன்று வாடிக்கையாளர் அவசர எண்களை அழைத்தபோது அவரது சாம்சுங் கைப்பேசி, காலாவதியான பழைய மென்பொருளில் இயங்கியதால் இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை என்று அறியப்பட்டுள்ளது.

இதுபோன்ற பழைய மென்பொருளைக் கொண்ட கைப்பேசிகளை வைத்துள்ளோர், அவற்றை உடனே மேம்படுத்திக்கொள்ளுமாறு டிபிஜி தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு ஆணையத்திடம் சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்