ஜார்ஜ் டவுன்: மலேசியாவில் ஜவ்வு மிட்டாய் (Gummy Candy) தொண்டையில் அடைத்து பினாங்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பத்து வயது சிறுவன் வியாழக்கிழமை இரவு (பிப்ரவரி 20) உயிரிழந்தான்.
இதனை சிறுவனின் அத்தை சிட்டி ஃபர்ஹானி முகம்மது ஃபிக்ரி, 33 உறுதிப்படுத்தினார்.
அவருடன் தொடர்புகொண்டபோது, மருத்துவமனையில் 11.00 மணியளவில் சிறுவன் மாண்டதாகத் தெரிவித்தார்
பெர்னாமா தகவலை மேற்கோள்காட்டி இத்தகவலை த ஸ்டார் வெளியிட்டிருந்தது.
மருத்துவமனை நடைமுறைகள் முடிந்ததும் பெர்மாத்தாங் பிஞ்ஞாயில் உள்ள அவரது பாட்டியின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுவார்,” என்று அவர் மேலும் கூறினார்.
முகம்மது ஃபாமி ஹஃபிஸ் முகம்மது ஃபக்ருடின், பட்டர்வொர்த்தில் உள்ள எஸ்கே சுங்கை டுவா பள்ளியின் மாணவர். சம்பவத்தன்று பள்ளிக்கு வெளியே அவர் ஜவ்வு மிட்டாயை வாங்கிச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஜவ்வு மிட்டாய் தொண்டையில் அடைத்துக் கொண்டதால் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.
பினாங்கு மாநில சுகாதாரக் குழுவின் தலைவரான டேனியல் கூய், ஆரம்பக்கட்ட விசாரணையில் பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் சிறுவன் ஜவ்வு மிட்டாயை வாங்கியிருப்பதாகத் தெரிகிறது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
சுற்றியுள்ள கடைகளில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
“ஜாலான் சுங்கை டுவா வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜவ்வு மிட்டாய் மேல்விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,” என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.