இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்சின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, கொழும்பில் உள்ள வீடு ஒன்றில் இறந்துகிடக்கக் காணப்பட்டார்.
அவர் மீதான குற்றச்சாட்டை அதிகாரிகள் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்த மரணம் நேர்ந்துள்ளது.
கபில சந்திரசேனவின் மரணம் குறித்துக் காவல்துறை விசாரித்து வருவதாகச் செய்தித் தொடர்பாளர் எஃப். யூ. வூட்லர் தொலைபேசி மூலம் தெரிவித்தார். கொழும்பு நீதிவானின் ஆலோசனையும் பெறப்பட உள்ளதாக அவர் கூறினார்.
ஊழலை ஒழிப்பதாக இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்ததை அடுத்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விசாரணையில் சிக்கியுள்ளது.
இலங்கையின் ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சந்திரசேனவை மீண்டும் கைது செய்ய மே 7-ஆம் தேதி உள்ளூர் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருந்தது.
2020-ஆம் ஆண்டில், இலங்கையில் கொடுக்கப்பட்ட லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளுக்காக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சமரசத் தீர்வுக்கு ‘ஏர்பஸ் எஸ்இ’ (Airbus SE) நிறுவனம் ஒப்புக்கொண்டது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவரின் மனைவிக்கு லஞ்சம் கொடுத்ததும் இதில் அடங்கும்.
புருணை நாட்டில் உள்ள ஒரு போலி நிறுவனம் (shell company) மூலமாக அந்த அதிகாரி, 2 மில்லியன் டாலர் பெற்றுள்ளதாகப் பிரிட்டனின் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2011 முதல் 2015 வரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகத் திரு சந்திரசேன செயல்பட்டார்.
சமரசத் தீர்வைத் தொடர்ந்து, திரு சந்திரசேனவையும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவையும் ஏர்பஸ் விமான விற்பனையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் சந்தேக நபர்களாக இலங்கை அதிகாரிகள் அடையாளப்படுத்தினர்.
கடந்த மார்ச் மாதம் முதல் சந்திரசேன நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிர்வாகப் பங்குதாரர் பொறுப்பிலிருந்து வெளியேறிய பிறகு, இந்தத் தேசிய விமான நிறுவனம் இழப்புகளையும் கடன்களையும் குவித்து வந்தது.
விமான நிறுவனத்தை மறுசீரமைக்கவும், முதலீட்டாளரைக் கண்டறியவும் அரசாங்க அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

