கோலாலம்பூர் ஹோட்டலில் நடந்த மரணம்: போதைப்பொருள் சோதனையில் சிங்கப்பூரர்கள் உட்பட எண்மர் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் நடந்த மரணம்: போதைப்பொருள் சோதனையில் சிங்கப்பூரர்கள் உட்பட எண்மர் கைது

2 mins read
f9fdcaad-3a49-437b-8fc4-c6733515f75a
கைதான வெளிநாட்டவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள். ஹாங்காங், வியட்னாம், இந்தோனீசியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. - படம்: புளூம்பெர்க்

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் ஞாயிற்றுக்கிழமை (மே 24) அதிகாலை உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் அதிரடிச் சோதனையில் இரு சிங்கப்பூரர்கள் உட்பட எண்மர் கைது செய்யப்பட்டனர்.

ஹோட்டலில் தங்கியிருந்த 31 வயதுடைய உள்ளூர்வாசி ஒருவர் சுயநினைவு இழந்ததைத் தொடர்ந்து, அவர் கோலாலம்பூர் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப்பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு, அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரிக்பீல்ட்ஸ் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் சோதனையை மேற்கொண்டனர்.

பிரிக்பீல்ட்ஸ் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், ஆய்வாளர் ஹனிஃப் தலைமையில் அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்த நபர் தங்கியிருந்த ஹோட்டல் அறையைச் சோதனையிட்டனர்.

இச்சம்பவம் குறித்துப் பிரிக்பீல்ட்ஸ் காவல்துறைத் துணைத் தலைவர் ஹூ சாங் ஹூக் வெளியிட்ட அறிக்கையில், ஹோட்டல் அறையிலிருந்து இரு உள்ளூர்வாசிகளும் ஆறு வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதான வெளிநாட்டவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள். ஹாங்காங், வியட்னாம், இந்தோனீசியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

சோதனையின்போது, கிட்டத்தட்ட 1.5 கிராம் எடையுள்ள ‘கெட்டமைன்’ எனும் போதைப்பொருள் அடங்கிய நெகிழிப் பையும் 0.7 கிராம் எடையுள்ள மூன்று ‘எக்ஸ்டசி’ போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 225 மலேசிய ரிங்கிட் ($72.90) என மதிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்டவர்கள் மூன்று நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபரின் உடற்கூறாய்வு நிறைவடைந்த நிலையில், மரணத்திற்கான காரணத்தை அறிய ஆய்வக முடிவுகளுக்காகக் காவல்துறை காத்திருக்கிறது.

தற்போதைய நிலையில், ‘திடீர் மரணம்’ என வகைப்படுத்தப்பட்டுத் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்