பேங்காக்: மியன்மாரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28ஆம் தேதி) ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து அங்கு உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அந்நாட்டுக்கு அனைத்துலக உதவி சனிக்கிழமை (மார்ச் 29ஆம் தேதி) வரத் தொடங்கியது.
தற்போதைய நிலையில், இறந்தோர் எண்ணிக்கை 1,000க்கு மேல் என்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை 2,376 என்றும் அந்நாட்டு ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது மியன்மார் வானொலி வெள்ளிக்கிழமை 144 பேர் இறந்ததாக அறிவித்ததைவிட மிக அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
“சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் சேதமானதால் பொதுமக்களில் பலர் மரணமடைந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்,” என்று அரசு ஊடகத்தில் தகவல் வெளியிட்ட ராணுவ ஆட்சி மன்றம் தெரிவித்தது.
இதுபற்றி வெள்ளிக்கிழமை கூறிய ராணுவ ஆட்சி மன்றத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹிலைங் மேலும் பலர் மரணமடைந்து காயமுற்றோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் எந்த நாடும் உதவி செய்வதுடன் நன்கொடையும் அளிக்கலாம் என அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், மியன்மாருக்கு உதவி வழங்கும் முதல் நாடாக இந்தியா விளங்குகிறது. இதன் தொடர்பில் இந்திய ஆகாயப் படை விமானம் ஒன்று 15 டன் உதவிப் பொருள்களை ஏற்றிக்கொண்டு ‘ஆப்ரேஷன் பிரம்மா’ என்ற பெயரில் யங்கோன் நகரில் தரையிறங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது முதற்கட்ட உதவிதான் என்றும் இந்தியாவிடமிருந்து மேலும் உதவிப் பொருள்கள் வரும் என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொரு நிலவரத்தில் சனிக்கிழமை (மார்ச் 29ஆம் தேதி) சீனாவிலிருந்து உதவிக் குழு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா, சீனா தவிர அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளும் உதவ முன்வந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா தவிர, சிங்கப்பூர், ரஷ்யா மலேசியா ஆகிய நாடுகளும் விமானங்களில் நிவாரணப் பொருள்களையும் மீட்புப் பணியினரையும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மியன்மாரில் 2021ஆம் ஆண்டு ராணுவம் புரட்சி மூலம் ஆட்சியைத் தன் கையில் எடுத்துக்கொண்டதிலிருந்து அது உள்நாட்டுப் போரால் சீரழிந்து வருகிறது.
“மியன்மாரில் நடப்பவற்றை அணுக்கமாக கண்காணித்து வருகிறோம். கூடுதல் உதவியும் அனுப்பி வைக்கப்படும்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
இந்நிலையில், மியன்மாருக்கு அவசர மனிதநேய உதவி தேவைப்படுவதை தாங்கள் அறிந்துள்ளதாகவும் தாங்கள் மீட்பு நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஆசியான் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.