நியூயார்க்: அமெரிக்கக் குடிநுழைவு, சுங்க அமலாக்கத் தடுப்பு நிலையங்களில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்தாண்டுகளில் இல்லாத அளவை எட்டியுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குடியேறிகள்மீது சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்திவரும் நிலையில், அந்தப் புள்ளிவிவரங்கள் வெளியாகியிருப்பதாக அவை கூறின.
2025 ஜனவரி மாதம் அதிபர் டிரம்ப்பின் இரண்டாம் தவணைக்காலம் தொடங்கியதிலிருந்து அமெரிக்கக் குடிநுழைவு, சுங்க அமலாக்கத் தடுப்பு நிலையங்களில் குறைந்தது 52 மரணங்கள் நேர்ந்துள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பும் மனித உரிமைக்கான மருத்துவர்கள் அமைப்பும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
டிரம்ப் அவரது இரண்டாம் தவணைக்காலத்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதை ஒரு முக்கிய முன்னுரிமையாகக் கொண்டுள்ளார்.
அதன்படி, அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோரைக் கைதுசெய்து, தடுப்புக்காவல் நிலையங்களை விரிவுபடுத்தி வருகின்றனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரிமுதல் இவ்வாண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில், குடிநுழைவு, சுங்க அமலாக்கத் தடுப்பு நிலையத்தில் நிகழ்ந்த வருடாந்தர மரண விகிதம்,
அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்புநோக்க மரண விகிதம் 140 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததைவிட, அந்த மரண விகிதம் மிக அதிகமாக உள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அந்த மரண விகிதம், டிரம்ப்பிற்கு முன்பு அதிபராக இருந்த ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தில் இருந்த விகிதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.
கடந்த 2017 முதல் 2021 வரையிலான டிரம்ப்பின் முதல் தவணைக்காலத்தைவிட அது இரண்டு மடங்குக்கு அதிகமாகவும் உள்ளது.
“குடிநுழைவு, சுங்க அமலாக்கத் தடுப்பு நிலையத்தில் மரண விகிதம் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளதை நாம் காண்கிறோம்,” என்று அந்த அறிக்கையை இணைந்துத் தயாரித்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளர் ரீகன் வில்லியம்ஸ் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

