டெஹ்ரான்: ஈரானில் நடந்து வந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் குறைந்தது 648 பேர் கொல்லப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
தனக்கு ஆதரவு தெரிவிக்கக் கோரி அரசாங்கம் அழைப்பு விடுத்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திங்கட்கிழமை (ஜனவரி 12) கலந்துகொண்டனர்.
வெளிநாட்டுத் தலையீட்டால் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததாகக் கூறும் ஈரானிய அரசாங்கம், பேரணியின்போது மக்கள் ஈரானியக் கொடிகளை அசைத்து தனக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியதாகக் கூறியது.
ஈரானில் ஜனவரி 8ஆம் தேதியிலிருந்து நாடு தழுவிய அளவில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. இணையக் கண்காணிப்பு அமைப்பான ‘நெட்புளோக்ஸ்’, இந்த முடக்கம் நான்கு நாள்களுக்கும் மேலாக நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இணையச் சேவைத் துண்டிப்பு, போராட்டக்காரர்கள் மீது அதிகாரிகள் நடத்திவரும் ஒடுக்குமுறையை வெளியுலகிற்குத் தெரியாமல் மறைப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளதால், சரியாக எத்தனைப் பேர் இறந்துவிட்டனர் என்பதைச் சரிபார்ப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகக் கூறிய நார்வேயைச் சேர்ந்த ஈரான் மனித உரிமை அமைப்பு, ஏறக்குறைய 10,000 பேர் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவித்தது.
ஈரானில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் ராணுவ ரீதியாகத் தலையிடப் போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஈரான்மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கெரோலின் லெவிட் திங்கட்கிழமை தெரிவித்தார்.
எனினும், அரசதந்திரச் செயல்முறையே எப்போதும் திரு டிரம்ப்பின் முதல் விருப்பமாக இருக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
1989 முதல் ஈரானை ஆட்சி செய்துவரும் உச்சமன்றத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி ஹமெனி, 86, திங்கட்கிழமை நடந்த அரசாங்க ஆதரவுப் பேரணிகள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கையாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், டெஹ்ரானில் வெளிநாட்டுத் தூதரகங்கள் பங்கெடுத்த மாநாடு ஒன்றில் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி, ஈரான் போரை விரும்பவில்லை என்றாலும் அதற்கு முழுமையாகத் தயாராக உள்ளதாக எச்சரித்துள்ளார்.

