யங்கூன்: மியன்மாரில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து வெடித்த உள்நாட்டுப் போரில், இதுவரை அனைத்துத் தரப்பிலும் சேர்த்துப் மாண்டோர் எண்ணிக்கை 100,000ஐக் கடந்துள்ளதாக போர்க் கண்காணிப்பு அமைப்பான ACLED ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று தெரிவித்துள்ளது. ஆசியாவின் மிகக் கொடூரமான மோதலாகக் கருதப்படும் மியன்மார் உள்நாட்டுப் போரில், இதுவரை 100,114 பேர் உயிரிழந்துள்ளனர்.ன்
2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆங் சான் சூச்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தைக் கவிழ்த்து, ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலைங் ஆட்சியைக் கைப்பற்றினார்.
இதற்கு எதிராகத் தொடங்கிய அமைதிப் போராட்டங்கள் ராணுவத்தால் ஒடுக்கப்பட்டதை அடுத்து, ஜனநாயக ஆதரவாளர்கள் ஆயுதமேந்திய அமைப்புகளை உருவாக்கி, ஏற்கெனவே மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வரும் சிறுபான்மை இனப் படைகளுடன் இணைந்து போரிட்டு வருகின்றனர்.
2025ஆம் ஆண்டில், பாலஸ்தீனப் பகுதிகளுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக அதிக மோதல்கள் நிகழ்ந்த நாடாக மியன்மார் பதிவாகியுள்ளது.
தற்போது மியன்மாரில் 1,200க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஆயுதமேந்திய அமைப்புகள் போரிட்டு வருவதால், இது உலகின் மிக அதிகமாகப் பிளவுபட்ட மோதல் என்று அழைக்கப்படுகிறது.
இந்தத் தீவிரப் போரினால் நாட்டில் வறுமை அதிகரித்து, 3.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக அவதியுறுகின்றனர்.
மேலும், ஐந்தில் ஒருவருக்கு மேல் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர் என ஐநா சபை எச்சரித்துள்ளது.

