இந்தோனீசியா: இந்தோனீசியாவின் சிடோர்ஜோ பகுதியில் செப்டம்பர் 29ம் தேதி இடிந்துவிழுந்த அல் கோசினி இஸ்லாமியப் பள்ளிக் கட்டடத்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) தெரிவித்துள்ளனர்.
“ஞாயிற்றுக்கிழமை காலை வரை, 141 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 104 பேர் பாதுகாப்பாக உள்ளனர். இருப்பினும் 37 பேர் மரணமடைந்துள்ளனர்,” என்று தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான முகவையின் இயக்குநர் யூடி பிரமான்டியோ அறிக்கை ஒன்றில் கூறினார். மேலும் 26 பேர் காணாமல் போயிருக்கின்றனர் எனவும் அவர் சொன்னார்.
யாருடையது என்று அடையாளம் காணப்படாத மனித உடல் உறுப்பை மீட்ட மீட்புப் பணியாளர்கள், அதற்குரியவரை மாண்டோர் எண்ணிக்கையில் சேர்த்ததாகத் திரு யூடி குறிப்பிட்டார். மீட்புப் பணிகள் 60 விழுக்காடு முடிவடைந்துள்ளது என்று தேசியப் பேரிடர் அமைப்பின் அதிகாரியான புடி இராவான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“நாளை இறுதிக்குள் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரின் விவரங்களை உறுதிசெய்ய வாய்ப்புள்ளது” எனவும் நேரடியாக ஒளிபரப்பான செய்தியாளர் சந்திப்பில் திரு புடி நம்பிக்கை தெரிவித்தார்.
கட்டடம் இடிந்த காரணத்தை அதிகாரிகள் விசாரித்தாலும் தரக்குறைவான கட்டுமானத்தின் விளைவு இது என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.