அமெரிக்காவின் தெற்கு, மத்திய மேற்குப் பகுதியில் உள்ள பல மாநிலங்களைச் சூறாவளியும் புயலும் பதம் பார்த்ததில் பல நகர்களிலும் கிராமங்களிலும் பெருத்த சேதம் ஏற்பட்டுவிட்டது.
குறைந்தபட்சம் 26 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். வீடுகள் நாசமாயின. ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். 60க்கும் மேற்பட்ட சூறாவளிக் காற்று சுழன்று சுழன்று வீசியதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது.
அர்கான்சஸ், டென்னசி, இல்லினோய், இண்டியானா, அலபாமா, மிஸ்சிசிபி ஆகியவை உள்ளிட்ட மாநிலங்களில் உயிருடற் சேதம் ஏற்பட்டது.
இதனிடையே, அர்கான்சஸ் மாநிலத்தில் இருக்கும் வெய்ன் என்ற நகரைச் சேர்ந்த அஸ்லே மாக்மிலன் என்ற மாது, சூறாவளி வீசியபோது தானும் தன் கணவரும் தனது பிள்ளைகளும் நாய்களும் ஒரு சிறிய குளியல் அறைக்குள் பதுங்கிக்கொண்டதாகக் கூறினார்.
"எங்கள் கதை முடிந்துவிட்டது என்று பயந்து ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுத்துக்கொண்டோம். அந்த நேரம் பார்த்து ஒரு பெரிய மரம் முறிந்து எங்கள் வீட்டின் மேல் விழுந்தது. நல்ல வேளையாக நாங்கள் யாரும் காயம் அடையாமல் தப்பிவிட்டோம்," என்றாரவர்.
"சூறாவளி வீசியபோது வீடே ஆடியது. பயங்கரமாக சத்தம் கேட்டது, பாத்திர பண்டங்கள் எல்லாம் குலுங்கின. சூறாவளி முடிந்ததும் புயலுக்குப் பின் அமைதி நிலவியது," என்று அந்த மாது மேலும் கூறினார்.
வெய்ன் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் லிசா வோர்டன் என்ற மாது, "நல்ல வேளையாக மாணவர்களை முன்னதாகவே வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். இல்லை எனில் பெருத்த சேதம் ஏற்பட்டு இருக்கும்," என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.