கரகாஸ்: வெனிசுவேலாவில் சென்ற மாதம் நேர்ந்த இரட்டை நிலநடுக்கங்களில் மாண்டோர் எண்ணிக்கை 5,208க்கு அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) வெளியிடப்பட்ட அதிகாரத்துவப் புள்ளிவிவரங்களில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் 24ஆம் தேதி வெனிசுவேலாவை வலுவான இரண்டு நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக உலுக்கின. தலைநகர் கரகாசுக்கு அருகே உள்ள கடலோர மாநிலமான லா குவைரா மிகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.
காயமுற்றோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. அது தொடர்ந்து 16,740ஆக இருப்பதாய் அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் ரோட்ரிகஸ் கூறினார்.
லா குவைரா மாநிலத்தில் விழுந்து நொறுங்கிய கட்டடங்களின் இடிபாடுகளிலிருந்து சடலங்களை மீட்கும் பணி தொடர்கிறது.
இன்னும் எத்தனை பேரைக் காணவில்லை என்பதுகுறித்த விவரங்களை வெனிசுவேலாவின் அதிகாரிகள் வெளியிடவில்லை.
லா குவைராவில் ஏறக்குறைய 20,000 பேர் வீடின்றித் தவிக்கின்றனர். விளையாட்டரங்குகளில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்கள், பொதுச் சதுக்கங்கள், நடைபாதைள் முதலியவற்றில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கங்களில் 850க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமுற்றன. அவற்றில் 190 தரைமட்டமாயின.

