மேற்கு ஜாவா நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை 34ஆக அதிகரிப்பு

1 mins read
b649115c-5b08-4f71-9628-b8b19c40dffd
தேடுதல், மீட்புப் பணியில் குறைந்தது 800 மீட்புப் பணியாளர்கள், ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவா நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 32 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், புதன்கிழமை (ஜனவரி 28) காலை மழை பெய்ததால் தேடுதல் மீட்புப் பணிகள் தடைப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

ஜனவரி 24ஆம் தேதி காலை பண்டோங் பாராட் பகுதியில் உள்ள பாசிர் லங்கு கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

அதற்கு ஒரு நாள் முன்பு அப்பகுதியில் கனமழை பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கிராமம் மலைகள் சார்ந்த இடம் என்றும் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து ஏறத்தாழ 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

23 பேர் உயிர் பிழைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

எல்லைச் சுற்றுக்காவல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 23 ராணுவ வீரர்கள் மாண்டதாக இந்தோனீசியக் கடற்படை செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 27) தெரிவித்தது.

சடலங்களை அடையாளம் காணும் பணிகளில் குழு ஒன்று ஈடுபட்டு வருவதாக இந்தோனீசியாவின் தேசியப் பேரிடர் நிர்வாக ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் திரு அப்துல் முஹாரி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

தேடுதல், மீட்புப் பணியில் குறைந்தது 800 மீட்புப் பணியாளர்கள், ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட கிராமத்திலிருந்து ஏறத்தாழ 700 கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் அருகில் உள்ள அரசாங்கக் கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்