ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அரசாங்கத்தை விமர்சிக்கும் சஞ்சிகைக்குப் பன்றித் தலைகளும் தலை துண்டிக்கப்பட்ட எலிகளும் அனுப்பப்பட்டன.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து பத்திரிக்கை சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்று ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
1970களிலிருந்து வெளிவரும் இந்தோனீசியாவின் முன்னணி வார சஞ்சிகைகளில் ஒன்றான டெம்ப்போ, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியந்தோவின் அரசியல் கொள்கைகளை விமர்சித்து வந்துள்ளது.
முன்னாள் ராணுவ ஜெனரலான சுபியாந்தோ, இந்தோனீசியாவின் முன்னாள் சர்வாதிகாரியான மறைந்த சுகார்த்தோவின் ஆட்சியில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
தலை துண்டிக்கப்பட்ட ஆறு எலிகளின் உடல்கள் வைக்கப்பட்ட பெட்டியைத் தாங்கள் சனிக்கிழமை (மார்ச் 22) கண்டதாக டெம்ப்போ அலுவலகத்தில் வேலை செய்யும் துப்புரவுப் பணியாளர்கள் கூறினர். அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் இத்தகவலை வெளியிட்டது.
அதேபோல், கடந்த வியாழக்கிழமை (மார்ச் 20) காதுகள் இல்லாத பன்றித் தலையும் அந்த அலுவலகத்தில் காணப்பட்டது. அது, டெம்ப்போ செய்தியாளர் ஒருவருக்காக அனுப்பப்பட்டிருந்தது.
இதுகுறித்துப் பேசிய ‘கமிட்டி டு புரொட்டெக்ட் ஜர்னலிஸ்ட்ஸ்’ (Committee to Protect Journalists) என்றழைக்கப்படும் செய்தியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உதவும் அமைப்பின் ஆசிய கண்டத்துக்கான தலைவர் பெ லி யீ, “இது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட அபாயகரமான அச்சுறுத்தல் நடவடிக்கையாகும்,” என்று சனிக்கிழமை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் சொன்னார்.
“இந்தோனீசியாவில் உள்ள செய்தியாளர்களுக்கு, பின்விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்குமோ என்ற அச்சமின்றி சுமுகமாக இயங்கும் சூழல் இருப்பது அவசியம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து விசாரணை தொடங்கவேண்டும் என்று மனித உரிமை அமைப்பான ஏம்னெஸ்ட்டி இன்டர்நேஷனலின் இந்தோனீசியாவுக்கான நிர்வாக இயக்குநர் உஸ்மான் ஹமித் சனிக்கிழமையன்று ஏஃப்பியிடம் சொன்னார். இந்தோனீசியாவில் செய்தியாளராகப் பணியாற்றுவது என்பது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஈடான அனுபவமாக மாறும் அபாயம் இருப்பதாக அவர் சாடினார்.
தலை துண்டிக்கப்பட்ட எலிகள், பன்றித் தலை தங்களுக்கு அனுப்பப்பட்டது டெம்ப்போ ஆற்றும் பணிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி என்று அதன் தலைமை ஆசிரியர் செத்ரி யஸ்ரா சுட்டினார். இருந்தபோதும் டெம்ப்போ, தொடர்ந்து அதன் இலக்குக்கு இணங்கச் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
“பயப்பட வைப்பதுதான் நோக்கம் என்றால் நாங்கள் அசரப்போவதில்லை. இந்தக் கோழைத்தனமான செயலை நிறுத்திக்கொள்ளுங்கள்,” என்று அவர் அறிக்கையில் எடுத்துரைத்தார்.

