ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத் திட்டத்தை மார்ச்சில் தொடங்க மலேசியா இலக்கு

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத் திட்டத்தை மார்ச்சில் தொடங்க மலேசியா இலக்கு

2 mins read
4de15dc3-2618-42c4-940f-996cedc6fcdb
சிங்கப்பூர்-மலேசிய பொருளியல் உறவுகளின் முக்கியத் தூணாக புதிய சிறப்புப் பொருளியல் மண்டலம் திகழும் என்று இரு நாட்டு அமைச்சர்கள் கூறினர். - படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் சிங்கப்பூர்-மலேசியப் பொருளியல் உறவுகளின் முக்கியத் தூண் என்று இரு நாடுகளின் அமைச்சர்களும் உறுதி தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட்டும் மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹம்மது நசிரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) சந்தித்துப் பேசினர்.

சிறப்புப் பொருளியல் மண்டல உருவாக்கம் தற்போது திட்டமிடல் என்பதிலிருந்து அமலாக்கத்தை நோக்கி நகர்ந்திருப்பதாக இரு அமைச்சர்களும் கூறினர்.

ஜோகூர் மாநிலத்தின் அளவு, வளங்களை சிங்கப்பூரின் மூலதனம், தொழில்நுட்பம், உலகத் தொடர்பு போன்றவற்றுடன் இணைப்பதன் மூலம் அதிக மதிப்பீட்டிலான முதலீடுகளை அந்த மண்டலம் ஈர்க்க முடியும்.

மேலும், விநியோகத் தொடர்களை வலுப்படுத்துவது, கடற்பாலத்தின் இருமருங்கிலும் தரமான வேலைகளை உருவாக்குவது போன்றவையும் பொருளியல் மண்டலத்தால் சாத்தியப்படும் என்பதை இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில், மலேசியப் பொருளியல் அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் பெருந்திட்டத்தை மலேசியா இறுதி செய்து வருகிறது. அவை நீண்டகால தொலைநோக்கை உணர்த்துபவை.

“திட்டத்தை வரும் மார்ச் மாதம் அதிகாரபூர்வமாகத் தொடங்க மலேசியா இலக்கு கொண்டுள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோகூர்-சிங்கப்பூர் ஒத்துழைப்பு என்பது நம்பிக்கை, கைவிடாத கொள்கை, பலன்களைப் பகிர்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உருவான நீண்டகாலப் பங்காளித்துவத்தின் வெளிப்பாடு என்பதை சிங்கப்பூர்-மலேசிய அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர்.

சிறப்புப் பொருளியல் மண்டலத் திட்டத்தைச் செயல்படுத்தத் தேவைப்படும் மதிப்புமிக்க முதலீடுகள், மின்னிலக்கமயமாக்கல், நீடித்து நிலைக்கும் மேம்பாடு, திறன்மேம்பாடு ஆகியவற்றில் தொடர்ச்சியான ஒத்துழைப்பை அவர்கள் வரவேற்றனர்.

திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிகழ்வுப் பட்டியலின் கீழ் பொருளியல் ஒத்துழைப்பின் மீது தனிக்கவனம் செலுத்தவும், திட்டம் குறித்து தெளிவுபடுத்தவும் ஜோகூர்-சிங்கப்பூர் ஒத்துழைப்பு அமைச்சர்நிலைக் குழுவை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு அமைச்சர்களும் ஆலோசித்தனர்.

குறிப்புச் சொற்கள்