ஷா ஆலம்: சிலாங்கூர் மாநிலத் தொகுதி ஒன்றின் நிலை குறித்த முடிவு இந்த வாரம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, இடைத்தேர்தல் தேவையா என்பதைத் தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும் என சிலாங்கூர் முதலமைச்சர் அமிருதின் ஷாரி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்தார்.
அத்தொகுதியின் நிலை குறித்து சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற சபாநாயகரிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்புக்காக மாநில அரசு காத்திருப்பதாகவும் இவ்விஷயம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெரிவிக்கப்படுவதற்கு முன்பு மாநிலச் சட்ட ஆலோசகர் ஒரு குறிப்பைத் தயாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
“சபாநாயகரின் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம்,” என்று அரசு ஊழியர்களுடனான முதலமைச்சர் பேரவைக் கூட்டம் மற்றும் ‘ஜலூர் ஜெமிலாங் கொடியைப் பறக்கவிடுங்கள்’ பிரசாரத்தின் தொடக்கவிழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
தொடர்புடைய சட்ட விதிகளுக்கு இணங்க இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்தவொரு முடிவையும், அனைத்து சட்ட நடைமுறைகளையும் மாநில அரசு பின்பற்றும் என்று அமிருதின் கூறினார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் தகுதி குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அவசியமா என்பதை மாநில அரசு ஆராய்ந்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

