வியட்னாமில் குழந்தைப் பிறப்பு சரிவு; இரு குழந்தைக் கொள்கைக்கு முடிவு

2 mins read
1c9d06d3-fa1c-486f-9b04-9a58c4afb728
முன்னைய சட்டப்படி, சிறப்பு நிலைமைகள் தவிர்த்து, வியட்னாமியக் குடும்பங்கள் ஒன்று அல்லது இரு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

ஹனோய்: குழந்தைப் பிறப்பு விகிதம் முன்னில்லாத அளவிற்குக் குறைந்துவிட்டதால் இரு குழந்தைகளுக்குமேல் பெறக்கூடாது என்ற கொள்கையை வியட்னாம் கைவிட்டது.

தேசிய நாடாளுமன்ற நிலைக்குழு செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) ஒப்புதல் அளித்த புதிய ஒழுங்குமுறை விதியானது, எப்போது குழந்தை பெற்றுக்கொள்வது, எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்வது போன்ற உரிமைகளை வழங்குவதாக அதிகாரத்துவ வியட்னாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னைய சட்டப்படி, சிறப்பு நிலைமைகள் தவிர்த்து, குடும்பங்கள் ஒன்று அல்லது இரு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டன.

மொத்தக் கருவள விகிதமானது ஒரு பெண்ணுக்கு நான்கு குழந்தைகளுக்குமேல் இருந்ததை அடுத்து, அக்கட்டுப்பாடு 1988ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கருவள விகிதமானது ஒரு பெண்ணுக்கு 1.91 குழந்தை என முன்னில்லாத அளவிற்குக் கடந்த டிசம்பரில் குறைந்தது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அச்சரிவு நீடித்தது..

இதனையடுத்து, எத்தனை குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்தும் அவற்றை எப்போது பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்தும் இணையர் அல்லது ஒற்றைப் பெற்றோரே முடிவெடுக்க அனுமதிக்கும் வகையில் சுகாதார அமைச்சு சென்ற ஆண்டு சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தது.

“வியட்னாம் மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது,” என்று ஐநா மக்கள்தொகை நிதியம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பதாவது ஆண்டாக ஜப்பானில் வீழ்ச்சி

இதனிடையே, தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாகக் கடந்த 2024ஆம் ஆண்டிலும் ஜப்பானில் கருவள விகிதம் சரிவுகண்டுள்ளது.

அங்கு ஒரு பெண்ணுக்கு 1.15 குழந்தை என்ற அளவில் அவ்விகிதம் குறைந்தது. முந்திய 2023ஆம் ஆண்டில் அவ்விகிதம் 1.20ஆக இருந்தது.

கடந்த 1947ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானில் குழந்தைப் பிறப்பு விகிதம் பதிவுசெய்யப்பட்டுவரும் நிலையில், இதுவே ஆகக் குறைவு என்று அந்நாட்டுச் சுகாதார அமைச்சு புதன்கிழமை (ஜூன் 4) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

குறிப்பாக, தலைநகர் தோக்கியோவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் கருவள விகிதம் ஒன்றுக்கும் குறைவாகப் பதிவாகி இருக்கிறது.

ஜப்பானில் சென்ற ஆண்டு ஏறக்குறைய 686,000 குழந்தைகள் பிறந்தன. குழந்தைப் பிறப்பு 700,000க்கும் கீழ் பதிவானது இதுவே முதன்முறை.

மாறாக, 2024ஆம் ஆண்டில் அங்கு 1.61 மில்லியன் மரணங்கள் பதிவாயின.

குறிப்புச் சொற்கள்