அறிவியல்மீதான பொதுமக்களின் நம்பிக்கை சரிவு: கருத்தாய்வு

அறிவியல்மீதான பொதுமக்களின் நம்பிக்கை சரிவு: கருத்தாய்வு

படம்: ராய்ட்டர்ஸ்

11 Oct 2026 - 4:15 pm

2 mins read

லண்டன்: கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அறிவியல்மீது பொதுமக்களுக்கு இருந்த மிகுந்த நம்பிக்கை தற்போது பெரிதும் குறைந்துவிட்டதாக உலகளாவிய கருத்தாய்வு ஒன்று தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் 2020ஆம் ஆண்டில் 80 விழுக்காடாக இருந்த அறிவியல்மீதான பொதுமக்களின் நம்பிக்கை, 2025ஆம் ஆண்டில் 72 விழுக்காடாகக் குறைந்துவிட்டது.

அமெரிக்காவில் சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடும் விகிதம் பெரிதும் சரிந்ததால் இவ்வாண்டில் கிட்டத்தட்ட 3,900 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இது கடந்த முப்பதாண்டுகளில் இல்லாத அளவிற்கு அந்நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான பாதிப்பாகக் கருதப்படுகிறது.

வெல்கம் அறக்கட்டளை, கேலப், இப்சாஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து 140,000க்கும் மேற்பட்டோரிடம் நடத்திய விரிவான, உலகளாவிய கருத்தாய்வில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அறிவியல்துறை அரசியல்மயமாக்கப்பட்டதும், சமூக ஊடகங்களில் பரவிய பொய்ப் பிரசாரங்களும், மக்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியும்தான் இந்த நம்பிக்கைச் சரிவிற்கு முதன்மைக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

வசதியாக வாழ்வோரில் 39 விழுக்காட்டினர் அறிவியல்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், நிதி நெருக்கடியில் தவிப்போரில் 20 விழுக்காட்டினர் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தங்கள் நாட்டிலுள்ள மருத்துவமனைகள்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள மக்களிடம் அறிவியல்மீதான நம்பிக்கையும் அதிகமாக உள்ளது. மருத்துவர் அல்லது தாதியர் பரிந்துரைக்கும் தடுப்பூசியை உடனடியாகப் போட்டுக்கொள்வதாக 34 விழுக்காட்டினரும் யோசித்து முடிவுசெய்வதாக 48 விழுக்காட்டினரும் கூறினர். தடுப்பூசியே போட்டுக்கொள்வதில்லை என்று 15 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

அறிவியலால் பெரும்பாலான மக்களுக்கு நன்மை விளைவதாக அமெரிக்காவில் 57 விழுக்காட்டினர் கூறினாலும் அவர்களின் கருத்துகள் அரசியல் அடிப்படையில் முரண்பட்டுள்ளன. இருப்பினும், அரசாங்கத்தையும் செய்தியாளர்களையும்விட அறிவியல் அறிஞர்களையே உலகம் முழுவதும் மக்கள் அதிகமாக நம்புகின்றனர்.

உலகளவில் பத்தில் ஏழு பேர் இன்னமும் அறிவியலை முழுமையாக நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
அறிவியல்நம்பிக்கைபொதுமக்கள்கொவிட்-19