கொழும்பு: இலங்கையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவது குறித்து அந்நாட்டுப் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியா கவலை தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி மேற்கொள்ளாதோர், அதற்குத் தகுதிபெறாதோர் ஆகிய இருவகையான மாணவர்களுக்கும் இது பொருந்தும்.
இந்தப் போக்கு இலங்கை எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை என்று டாக்டர் அமரசூரியா குறிப்பிட்டார். இலங்கையின் மகாபோலா உபகாரச் சம்பளம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண நிலைத் தேர்விலிருந்து உயர்கல்விக்கு முன்னேறும் மாணவர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்து வந்துள்ளதை அவர் சுட்டினார். இது, நாடு எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க சவால் என்றும் அவர் சொன்னார். கல்வி என்பது அடிப்படை ஏட்டுக்கல்வியையும் தாண்டியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிபுணத்துவ மேம்பாடு, உலகச் சூழலுக்குப் பக்குவப்படுவது போன்ற அம்சங்களை உயர்கல்வி வழங்குவதாக டாக்டர் அமரசூரியா விவரித்தார். அத்தகைய அம்சங்கள், நாட்டின் எல்லாத் துறைகளிலும் தலைவர்களை உருவாக்க வகைசெய்பவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, மகாபோலா உபகாரச் சம்பளம் குறித்த சில பிரச்சினைகள், 2024ல் ஆட்சி மாறியபோது அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பல சிக்கல்கள் பிறகு சரிசெய்யப்பட்டதாகவும் டாக்டர் அமரசூரியா சொன்னார்.

