தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திறன்மிக்க பொறியியல் மூலம் கோலாலம்பூரில் ஆழ்குழிகளைத் தடுக்கலாம்: வல்லுநர்கள்

2 mins read
5e7bc4af-c9d8-4640-9e9e-110974dfcb37
சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த பகுதியில் இயற்கையான ஆழ்குழிகள் ஏற்படுவது வழக்கம் என்று மலேசியாவின் முன்னாள் புவித்தொழில்நுட்பச் சங்கத் தலைவர் லீ பெய்ர் டியென் விளக்கினார். - படம்: த ஸ்டார்/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

பெட்டாலிங் ஜெயா: சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த பகுதிகளில் கட்டுமானத்தின்போது முறையான பொறியியல் வடிவமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் ஆழ்குழிகள் ஏற்படாமல் தடுக்க இயலும் என்று மலேசியாவின் முன்னாள் புவித்தொழில்நுட்பச் சங்கத் தலைவர் லீ பெய்ர் டியென் கூறியுள்ளார்.

சுண்ணாம்புப் பாறைப் பகுதிகளில் கட்டுமானத்தை முறையாக வடிவமைக்காவிட்டால் ஆழ்குழிகள் ஏற்பட வாய்ப்புண்டு என்றார் அவர்.

இயற்கையான ஆழ்குழிகள் சுண்ணாம்புப் பாறைகள் உள்ள வட்டாரத்தில் ஏற்படுவது வழக்கம் என்று அவர் விளக்கினார்.

“சுண்ணாம்புப் பாறை கரையும் தன்மை கொண்டது. காலப்போக்கில் அது நீரில் கரைவதால், நிலத்தடியில் பள்ளங்களோ வெற்றிடங்களோ ஏற்படுவதுண்டு,” என்றார் திரு லீ.

அத்தகைய பள்ளத்தின் மேற்பகுதி இடிந்துவிழும்போது நிலத்தின் மேற்பரப்பில் ஆழ்குழி ஏற்படும் என்று அவர் கூறினார்.

எனவே, இத்தகைய பகுதிகளில் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே சுண்ணாம்புப் பாறைகளைக் கண்டறிந்து, பள்ளங்களை உரிய முறைகளில் வலுப்படுத்தும் நடைமுறை வழக்கமாகப் பின்பற்றப்படுவதாகத் திரு லீ சொன்னார்.

“ஆழ்குழிகள், இயற்கையானவை, மனித நடவடிக்கைகளால் ஏற்படக்கூடியவை என இரண்டு வகைப்படும்.

“இரண்டாவது வகையில், தண்ணீர்க் குழாய் அல்லது சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட கசிவால் நிலத்தடி மண் படிப்படியாக அடித்துச்செல்லப்பட்டு, ஆழ்குழி தோன்றக்கூடும்,” என்றார் அவர்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட ஆழ்குழியில் 48 வயது இந்தியச் சுற்றுலாப் பயணி மாண்ட சம்பவத்தை அடுத்துத் திரு லீ கருத்துரைத்தார்.

அந்த ஆழ்குழி, பயனீட்டுக் குழாயிலிருந்து தண்ணீர் கசிந்ததால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறிய அவர், இருப்பினும் உண்மையான காரணத்தைப் பணிக்குழுவின் விசாரணை முடிவு வெளியாகும்போதுதான் தெரிந்துகொள்ள இயலும் என்றார்.

மலேசியப் பேராசிரியர்கள் சங்கத்தின் சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மைப் பிரிவுத் தலைவர் இப்ராகிம் கோமூ, சிறப்பான பொறியியல் நடைமுறைகள் மூலம் மஸ்ஜித் இந்தியா சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றார்.

தம்மைப் பொறுத்தவரை அதை ஆழ்குழி என்பதைக் காட்டிலும் நிலத்தின் மேற்பரப்பு திடீரென்று பள்ளத்தில் வீழ்ந்ததாகக் கருதுவதாகக் கூறினார். மனித நடவடிக்கைகளால் ஏற்பட்ட பள்ளம்போல் அது தெரிகிறது என்றார் டாக்டர் இப்ராகிம்.

கோலாலம்பூரின் தண்ணீர்க் குழாய்கள், சாக்கடைக் குழாய்களுக்கான முறையாக வடிவமைக்கப்பட்ட புதிய நிலத்தடி உள்கட்டமைப்பைக் கட்டவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்