இளையரிடையே பாலியல் குற்றங்கள் தொடர்பில் காணப்படும் கவலைதரும் போக்கு

1 mins read
71aeb6c0-23d2-4807-96a8-3fd3731cd566
வன்போலிப் படங்கள் தொடர்பாக 2023ஆம் ஆண்டு 180 குற்றவியல் வழக்குகள் பதிவானதாக அண்மைய அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது. - படம்: பிக்சாபே

சோல்: வன்போலித் (deepfake) தொழில்நுட்பத்தின்வழி பாலியல் குற்றங்கள் புரியும் இளையர்களின் எண்ணிக்கை தென்கொரியாவில் அதிர்ச்சிதரும் வகையில் அதிகரித்துவருவதாக அண்மைய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் திறன் படைத்த இப்பிரிவினர் பெரும்பாலும் தங்களின் நண்பர்களையே அனுமதியின்றி இவ்வாறு பாலியல் ரீதியாக அமைந்த படங்களில் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய வன்போலிப் படங்கள் தொடர்பாக 2023ஆம் ஆண்டு 180 குற்றவியல் வழக்குகள் பதிவானதாக அறிக்கைவழி தெரியவந்துள்ளது.

இவ்வகை குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 120 பேரில், பதின்ம வயதினர் 91 என்று தேசிய காவல்துறை அமைப்பு திரட்டிய தரவுகளின் அடிப்படையில் அமைந்த அறிக்கை கூறியுள்ளது.

வன்போலித் தொழில்நுட்பம் தொடர்பான குற்றச் செயல்களின் எண்ணிக்கையும் அக்குற்றங்களுக்காக தண்டனை பெறும் பதின்ம வயதினரும் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்த வண்ணம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

“இந்த மின்னிலக்க பாலியல் குற்றங்கள் ஒருவர் மீது மீள முடியாத பாதிப்பை ஏற்படுத்தும். பதின்ம வயதினர் மத்தியில் பரவிவரும் இவ்வகை பாலியல் குற்றச் செயல்களை ஒரு விளையாட்டாகக் கருதுகின்றனர்,” என்றார் அறிக்கையைத் திரட்டிய மக்கள் சக்திக் கட்சிப் பிரதிநிதி சோ இயூன்-ஹீ.

வன்போலித் தொழில்நுட்பத்தைக் கொண்ட குற்றச்செயல்களை வெவ்வேறு விதம் புரியும் போக்கும் தெரியவந்துள்ளது. ஒருவரைத் துன்புறுத்தவும் சிலசமயம் பணம் பிடுங்கவும் சிலர் இக்குற்றங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்